தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகட்டும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மே தினத்தையொட்டி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலகெங்கும் வாழும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவருடைய வாழ்த்து அறிக்கையில்:-
"உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களின் உன்னத திருநாளாம் மே தின நன்னாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'மே தின' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘உழைப்பாளர்களால் இந்த உலகம், உழைப்பாளர்களுக்கே இந்த உலகம்’ என்பதை வலியுறுத்தும் வகையில், முதன்முதலில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக போராடத் தொடங்கிய மே 1-ம் தேதி உலகமே நினைவுகூறும் வகையில் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
உழைக்கும் மக்களின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றுகின்ற இந்த மே தினத் திருநாளில், ‘உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள் கசப்பாக இருந்தாலும் அதன் கனிகள் இனிப்பானவை என்பதை உணர்ந்து, சோம்பலை நீக்கி, கடினமாக உழைத்தால் வாழ்வில் உயர்வு பெறலாம்’ என்ற ஜெயலலிதாவின் வாக்கை மனதில் நிறுத்தி அனைவரும் நம்பிக்கையோடு உழைத்தால் நாடும் வீடும் வளம் பெறும்.
தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, என் அன்புக்குரிய தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த 'மே தின' நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்"
என்று அவருடைய வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.