Coimbatore Illegal Children Sales Crime: கோவை சூலூர் அடுத்த திம்ம நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி விஜயன். இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த 17 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத நிலையில் இது தொடர்பாக பலரிடம் தங்களது குறையை சொல்லி புலம்பி உள்ளார்.
அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஹார்லிக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு உணவகம் நடத்தி வந்த அஞ்சலி - மகேஷ் குமார் தம்பதியுடன் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடமும் தங்களது பிரச்சனையை கூறி உள்ளனர் விஜயன் தம்பதியினர்.
பிறப்பு சான்றிதழுடன் குழந்தை விற்பனை
அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் இருவரும் தங்களிடம் பிறந்து 15 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் அந்த குழந்தை பீகாரில் இருப்பதாகவும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் விஜயனுக்கு பிறந்த குழந்தை போல பிறப்பு சான்றிதழ் உடன் குழந்தையை பெற்று தருவதாக கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | சென்னையில் புதுக்கடை.. 9 ரூபாய்க்கு 3 ஆடைகள், கடையில் குவிந்த மக்கள்
பணம் தருவதற்கும் விஜயன் சம்மதித்துள்ளார். இதனையடுத்து அஞ்சலி பீகாரில் உள்ள தனது தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பீகாரில் இருந்த அஞ்சலியின் தாய் பூனம் தேவி மற்றும் அஞ்சலியின் சகோதரி மேகாகுமாரி ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரில் இருந்து பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை சூலூருக்கு கொண்டு வந்து அஞ்சலியிடம் கொடுத்துள்ளார்.
குழந்தையை பெற்றுக் கொண்ட அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் விவசாயி விஜயனக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளார். முன்னதாக ஒரு லட்சத்து 80 ரூபாய் பணம் கொடுத்த நிலையில் மீதம் 70 ஆயிரம் ரூபாய் தர வேண்டி இருந்தது.
சமூக ஆர்வலரின் புகார்
இந்த சூழ்நிலையில் இந்த குழந்தை விற்பனை தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் சைல்ட் லைன் அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குழந்தை விற்பனையை உறுதி செய்தனர்.
மேலும் இது தொடர்பாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தை விற்பனை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திடுக்கிடும் தகவல்கள்...
அந்த விசாரணையில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்ட நிலையில் உணவகம் நடத்தி வந்த பீகார் தம்பதியினர் அஞ்சலி மற்றும் மகேஷ் குமாரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஞ்சலி - மகேஷ் குமார் தம்பதியினர் கோவையில் ஒரு பெண் குழந்தை மட்டுமின்றி மேலும் ஒரு ஆண் குழந்தையை ஆந்திராவைச் சேர்ந்த லாரி ஓட்டுனருக்கு 5 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி இருந்தது தெரியவந்தது.
மேலும், அஞ்சலி - மகேஷ் குமார் தம்பதிக்கு குழந்தைகளை கொடுக்கும் பீகாரை சேர்ந்த அஞ்சலியின் தாய் மற்றும் சகோதரியை பிடிக்க போலீசார் ஒரு பலே திட்டத்தை தீட்டியுள்ளனர்.
1500 ரூபாய்க்கு குழந்தை விற்பனை
அதாவது, குழந்தை ஒன்று வேண்டும் என அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் மூலம் சொல்லவைத்து, அஞ்சலியின் தாய் மற்றும் அவரது சகோதரியை கோவை வரவழைத்தனர். கோவை வந்த பூனம் தேவி மற்றும் மேகாவை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் ஒருவர் சிரமப்பட்டதாகவும், 1500 ரூபாய் கொடுத்து குழந்தையை தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி கோவை கொண்டு வந்து விற்பனை செய்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இரு குழந்தைகள் மீட்பு
இதனையடுத்து சூலூரில் விற்கப்பட்ட பெண் குழந்தை மற்றும் பூனம் தேவி, மேகா ஆகியோர் கொண்டு வந்த ஆண் குழந்தை ஆகிய இரண்டையும் போலீசார் மீட்டனர். இந்த வழக்கில் குழந்தையை வாங்கிய விவசாயி விஜயன் மற்றும் குழந்தையை விற்ற அஞ்சலி, மகேஷ் குமார், பூனம் தேவி, மேகா ஆகிய ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் உள்ளனர்.
பிறப்பு சான்றிதழ் போலியா...
பீகாரில் 1500 ரூபாய்க்கு குழந்தையை வாங்கி கோவையில் இண்டரை லட்சத்திற்கு விற்ற வட மாநில கும்பல் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. மேலும் இரு பச்சிளம் குழந்தைகளையும் போலீசார் மீட்டு இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளனர். போலீசார் வேறு ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதை தொடர்பாகவும் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, அந்த கும்பல் பிறப்பு சான்றிதழுடன் குழந்தையை விற்றுள்ளது. இதற்காக விஜயனிடம் ஆதார் கார்டு வாங்கி, அவருக்கு பிறந்த குழந்தை என்ற ரீதியில் பிறப்பு சான்றிதழை தயாரித்துள்ளனர். இது போலியாக தயாரிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழா அல்லது அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழா என்பதும் இன்னும் உறுதியாகவில்லை. இதுகுறித்தும் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | இனிப்பில் மயக்க மருந்து... துரோகியாகிய தோழி: சென்னையில் பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ