துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என திமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான சொத்துக்குவிப்பு புகாரினை விரைந்து விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன்.
ஊழல் பணத்தில் திரு ஓ.பன்னீர்செல்வமும், அவரது குடும்பத்தினரும் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மார்ச் 12ம் தேதியன்றே கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஊழல் தடுப்புத் துறைக்கு புகார் அளித்திருந்தார்.
ஆனால், அந்தப் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டது அ.தி.மு.க அரசு. இந்நிலையில் ஊழல் புகார் மீது உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, “ஜூலை 18 ஆம் தேதி அன்றே திரு ஓ.பன்னீர்செல்வத்தின் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவித்துள்ளது தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டு விட்டோம்.” என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் திரு ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரிலும், அறப்போர் இயக்கம் தந்த புகாரிலும் முதல் நிலை வழக்கு இருப்பதால் தான் ஆரம்பகட்ட விசாரணையை ஊழல் தடுப்பு துறை துவங்கி உள்ளது.
இந்த ஆரம்பகட்ட விசாரணை கூட நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்க தொடர்ந்த வழக்கால் தான். இந்த தாமதத்திற்கெல்லாம் காரணம் ஓ.பி.எஸ் வகிக்கும் பதவி தான்.
பொதுவாக ஊழல் வழக்கின் விசாரணை துவங்கியவுடனேயே அரசு ஊழியரை சஸ்பென்ட் செய்யும் நிலையோ, அல்லது வேறு இடத்திற்கு மாறுதல் செய்யும் நடைமுறையோ அமலில் இருக்கிறது. அப்படியிருக்கையில் ஆரம்ப கட்ட விசாரணையில் இருக்கும் பொது ஊழியர் திரு ஓ. பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக தொடருவதில் எவ்வித நியாயமும் இல்லை. ஊழல் விசாரணை சுதந்திரமாக நடைபெற வேண்டுமென்றால், முதலில் அவர் தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அப்போதுதான், ஊழல் தடுப்புத்துறையின் விசாரணையினை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது போல் விரைந்து முடிப்பதற்கும், சொத்துக் குவிப்பு குறித்து அதிகாரிகள் சுதந்திரமாக அனைவரையும் விசாரிப்பதற்கும் ஏதுவாக அமையும்.
அவர் ராஜினாமா செய்ய மறுத்தால், துணை முதலமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி அவர்கள் மாண்புமிகு ஆளுநருக்கு உடனடியாக பரிந்துரை செய்து, பாரபட்சமற்ற விசாரணைக்கு வித்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளளார்.