நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுகூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறப்புரையாற்ற வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். நாட்டின் தலையெழுத்தையே மாற்றிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்து வந்த பாதை என்ன? என்பதை பார்க்கலாம்...
மே 21, 1991:
ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற இருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்ற திட்டமிட்டிருந்தார் ராஜீவ் காந்தி. அவரை வரவேற்று மாலை அணிவிப்பது போல் கூட்டத்தில் ஒருவராக இருந்த விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையை சேர்ந்த தனு என்பவரால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர். 45-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஜூன், 1991:
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி அறிவு எனும் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19.
ஆகஸ்ட், 1991:
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவராசன் இந்த படுகொலைக்கு மூளையாக செயல்பட்டார். அவருக்கு இரண்டு 9 Volt பேட்டரிகள் வாங்கிக்கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம்சாட்டப்பட்டது. ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பேட்டரிகள் மூலம் இயக்கப்பட்டது. எனவே, பேரறிவாளன் உள்ளிட்ட பலர் மீது பயங்கரவாதம் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடா) சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
ஜனவரி, 1998:
பேரறிவாளன் மற்றும் வழக்கில் தொடர்புடைய 25 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது விசாரணை நீதிமன்றம்.
மே, 1999:
இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 19 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
2011:
பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற தேதி நிர்ணயிக்கப்பட்டது. பேரறிவாளன் உள்ளிட்டோர் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் சார்பாக மிகவும் புகழ்பெற்ற வழக்கறிஞர்களான ராம் ஜெத்மலானி, கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் வாதிட்டனர்.
பிப்ரவரி, 2014:
பேரறிவாளனின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.
டிசம்பர், 2015:
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன் கீழ் தன்னை விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநரிடம் பேரறிவாளன் கருணை மனு அளித்தார். ஆனால், ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால் தயார் அற்புதம் அம்மாள் அவர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் படிக்க | பேரறிவாளன் விடுதலையை ஏற்ற அண்ணாமலை..! காண்டான காயத்ரி ரகுராம்!
மார்ச், 2016:
ராஜீவ் படுகொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியது. இதனிடையே, 1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து சஞ்சய் தத் எதனடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என்று கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புனே ஏரவாடா சிறை நிர்வாகத்திற்கு பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார். ஆனால், இது தொடர்பாக பேரறிவாளனுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
ஆகஸ்ட், 2017:
உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை சந்திக்க முதன்முறையாக 26 ஆண்டுகள் கழித்து பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 45.
நவம்பர், 2017:
இந்த வழக்கு குறித்து பேரறிவாளனிடம் விசாரணை நடத்திய முன்னாள் சிபிஐ அதிகாரி, சிவராசனுக்கு தான் வாங்கிக்கொடுத்த 2 பேட்டரிகள் எதற்காக பயன்பட போகின்றன என்பது குறித்து பேரறிவாளனுக்கு தெரியாது. இது தொடர்பான தகவல் அவர் அளித்த வாக்குமூலத்தில் விடுபட்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
செப்டம்பர், 2018:
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது. குற்றவாளிகளை விடுதலை செய்ய வலியுறுத்தும் இந்த தீர்மானம் அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நவம்பர் 2020:
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜனவரி, 2021:
7 தமிழர்களை விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரைகள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் கெடு விதித்தது.
பிப்ரவரி, 2021:
7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு மட்டுமே உள்ளதாக தமிழக ஆளுநர் ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசுக்கு தெரிவித்ததாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
மே, 2021:
தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் திமுக ஆட்சி அமைத்தது. 7 தமிழர்களையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஒரு மாதம் பரோல் பரோல் வழங்கப்பட்டது. பிறகு இந்த பரோல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
டிசம்பர், 2021:
தன்னை விடுதலை செய்ய வலியுறுத்தி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க விருப்பம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மார்ச் 2022:
பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மே 18, 2022:
31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
19 வயதில் தாம் என்ன செய்கிறோம் எனும் புரிதல் இல்லாமல் பேரறிவாளன் செய்த ஒரு தவறால் அவரது இளமைக்காலம் முழுவதும் சிறையில் கழிந்தது. தாம் வாங்கிக்கொடுக்கும் பேட்டறிகள் எதற்காக பயன்பட போகிறது என்பது பேரறிவாளனுக்கு தெரியாது என அவரை விசாரித்த சிபிஐ அதிகாரி தெரிவித்திருப்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
ஒட்டுமொத்த உலகமும் பேரறிவாளனை குற்றவாளியாக பார்த்தபோது தன் மகன் எந்த குற்றமும் செய்திருக்கமாட்டான் எனும் நம்பிக்கையில் 31 ஆண்டுகளாக தனி ஒருவராக அவர் நடத்திய சட்டப்போராட்டம் வீண்போகவில்லை. பேரறிவாளனின் 30 ஆண்டுகால வாழ்க்கையில் 2 பேட்டரிகள் பெரும் பேரழிவை நிகழ்த்திவிட்டன. எவ்வளவு அவமானங்கள்! எத்தனை சிக்கல்கள்! அனைத்தையும் மீறி பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டிருப்பது ஒரு தாயின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
மேலும் படிக்க | ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR