தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு நேற்று (ஏப்ரல் 18) தேர்தல்கள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. இந்த தருணத்தில் சில இடங்களில் வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தேறியது. அதில் குறிப்பாக சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் வன்முறை நடைபெற்றது. அதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. பலர் படும் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தும் பதவிட்டுள்ளார். அதில், "காவல்துறை அலட்சியத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டு, இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டுள்ளது.
காவல்துறை யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது?
நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்!" எனக் கூறியுள்ளார்.
காவல்துறை அலட்சியத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டு, இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டுள்ளது.
காவல்துறை யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது?
நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்! pic.twitter.com/nikwX7DBRZ
— M.K.Stalin (@mkstalin) April 19, 2019
மேலும் தனது அறிக்கையில் அவர் கூறியதாவது, "அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 20-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டதையும், அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்குள்ளானதையும் காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்தது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதில் மட்டுமல்ல- ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்றவும் அதிமுக கூட்டணியினர் நடத்தியுள்ள அராஜகங்களை ஆங்காங்கே உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தடுக்கத் தவறிதோடு சட்டம் ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.