பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராடுவோம்: ஸ்டாலின்

ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என ஸ்டலின் தெரிவித்துள்ளார்! 

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Oct 12, 2018, 10:28 AM IST
பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராடுவோம்: ஸ்டாலின்
File Pic

ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என ஸ்டலின் தெரிவித்துள்ளார்! 

விடுதலை இதழின் சார்பில் சென்னை பெரியார் திடலில், பத்திரிகை சுதந்திரம் பாதுகாப்பும் பாராட்டும் என்ற பெயரில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூட்டத்திற்கு தலைமையேற்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, அந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரம் நக்கீரன் கோபாலுக்கு கிடைக்காது. அவர் இந்த கைது நடவடிக்கையை கண்டு பயப்படவில்லை. பொடா, தடாவை பார்த்தவர். ஜெயலலிதாவையே எதிர்த்தவர் அவர். எடப்பாடி பழனிசாமியை பார்த்தா பயந்துவிடுவார்.

கோட்டையில் இருப்பவர்கள் செய்த ஊழலை நினைத்து பயப்படுகின்றனர். கிண்டியில் உள்ளவரோ நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார். இப்படி நான் சொல்வதால், என் மீதும் வழக்குப்போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

பா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதித்து, காவல் துறையை கொச்சைப்படுத்தி பேசினார். அவரை கைது செய்ய இந்த அரசுக்கு ஏன் தைரியம் இல்லை. பெரியார் சிலையை அடித்து உடையுங்கள் என்று பேசிய எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறார். பெண் நிருபர்களை கொச்சைப்படுத்திய பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.வி.சேகரையும் கைது செய்யவில்லை. காரணம், ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று பயந்து கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயரும் அடிபட்டது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை வைத்தோம். உடனே கவர்னர் பன்வாரிலால் புரோகித் விசாரணை கமிஷன் வைத்தார். நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு 4 மாத காலம் ஆகிறது. அவருக்கு 8 முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏதோ நடந்திருக்கிறது. அந்த உண்மையைத்தான் கோபால் எழுதினார். ஆனால் கவர்னர் விதிகளை மீறி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். கவர்னரை உடனடியாக பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அவர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்.