நாளை சட்டப் பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் கருணாநிதி தலைமையில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றவுள்ளது.
இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் வெற்றிபெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்கின்றனர். திமுகவின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக முதன்முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் சட்டப் பேரவையில் எப்படி செயல்பட வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேச உள்ளனர்.
சட்டப் பேரவைக்குள் புதிய உறுப்பினர்களாக அடியெடுத்து வைக்கிறவர்களுக்கு வழிகாட்டுதல்களும் இந்தக் கூட்டத்தில் தலைவர்கள் வழங்குவார்கள் என்று திமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
துறைவாரியாக உள்ள அதிமுக அமைச்சர்களுக்கு ஏற்ப திமுக சட்டப் பேரவை உறுப்பினர்களை துறைவாரியாகப் பிரித்து, அந்தந்த துறைகளை கவனிக்க வேண்டும். அந்தந்த துறையில் உள்ள பிரச்னைகளைக் குறிப்பெடுத்து, அதற்கான ஆதாரங்களை திரட்டி வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.