ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரின் விடுதலை, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரிய மசோதா ஆகியவை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளன. இதில் நீட் விலக்கு மசோதா கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் 142 நாட்கள் கழித்து ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட முன்வரைவை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய தமிழக அரசு அதை அதே நாளில் ஆளுநருக்கு அனுப்பியது. தற்போது ஏறக்குறைய 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இந்த மசோதா மீது எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.
நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பவார், ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் அனைத்து சட்ட மசோதாக்களும் உள்துறை அமைச்சகத்தின் மூலம்தான் கையாளப்படும் எனவும், நீட் விலக்கு சட்ட மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வந்ததாக எவ்வித தகவல் இல்லை எனவும் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனால் நீட் மசோதா மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் வைத்திருப்பதால் இந்த ஆண்டும் மாணவர்கள் பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நீட் விலக்கு சட்டம்: விடிவு எப்போது?- ராமதாஸ் கேள்வி
இந்த நிலையில் மாநில சட்டமன்றத்தால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவைக் நிர்ணயிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் மசோதா கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், தற்போதைய அரசியலமைப்பு பிரிவுகளின் படி, சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு எந்த கால நிர்ணயமும் விதிக்கப்படவில்லை என்பதால், இது ஆளுநருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அளிப்பதோடு மக்களின் நலனுக்கு இடையூறாக உள்ளதெனவும் குறிப்பிட்டார்.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் நடவடிக்கைகள் மாநில அரசின் செயல்பாடுகளை மறைமுகமாகக் குறைக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், இதனால் அரசியலமைப்பால் நிறுவப்பட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார சமநிலை மீறப்படுவதாகவும் குறிப்பிட்டார். எனவே மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டுமென தனிநபர் மசோதாவை தாக்கல் செய்த திமுக எம்.பி.வில்சன், ஆளுநர் முடிவெடுக்கும் சட்ட மசோதாக்கள் மீது 2 மாதத்திலும், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய மசோதா மீது ஒரு மாதத்திலும் முடிவெடுக்கும் வகையில் கால நிர்ணயம் செய்து வகுத்து அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | நீட் தேர்வு விலக்கு மசோதாவா.? கை விரிக்கும் மத்திய அரசு..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR