கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை....
அந்தமான் கடல் பகுதியில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை, தென்மேற்கு வங்கக் கடல் நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், சென்னை நகரில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர், ஆவடி, உள்ளிட்ட இடங்களிலும் நேற்றிரவு நல்ல மழை பெய்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம் ஆகிய இடங்களிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலும் கனமழை பெய்துள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, நாகூர், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சில இடங்களில் புயல் நிவாரணப் பணிகளில் லேசாக தொய்வு ஏற்பட்டது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கபபட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கணேஷ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதே போல நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கும், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார்.