சாஃப்ட், சர்வாதிகாரி என வசனம் பேசுவதை நிறுத்துங்கள் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி விளாசல்

நான் ‘சாஃப்ட்’ முதலமைச்சர் அல்ல என்றும், சர்வாதிகாரி என்றும், வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் முதலமைச்சர் இறங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 13, 2022, 04:20 PM IST
  • தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது
  • சிறுவர்களும் போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள்
  • போதையை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை
சாஃப்ட், சர்வாதிகாரி என வசனம் பேசுவதை நிறுத்துங்கள் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி விளாசல் title=

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் திமுக அரசின் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு முன்னாள் இப்படிப்பட்ட ஆலோசனைகள் எல்லாம் நடத்தாமல்தான் காவல் துறைத் தலைவர் ஆப்பரேஷன் கஞ்சா 2.0 என்று அறிவித்தாரா? இந்த அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன? காவல் துறைத் தலைவரின் இந்த அறிவிப்பு வெத்துவேட்டு ஆனதால்தான், இந்த முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தினாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன.

"நாடகமே இந்த உலகம், ஆடுவதோ பொம்மலாட்டம்" என்ற ஒரு பழம்பெரும் திரைப்படப் பாடலை யாரோ ஒருவர் இந்த திமுக அரசின் முதலமைச்சருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் போலும். ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்றுவரை மக்களை ஏமாற்றும் வகையில் தினம் ஒரு அறிவிப்பு, அடிக்கடி குழுக்கள் அமைத்தல் என்று பொம்மலாட்ட நாடகங்களை அரங்கேற்றி வருவது கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

காவல் துறையினர் தினசரி கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பிடிப்பதாகவும், கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதாகவும், கடத்திய ஆசாமிகளைக் கைது செய்வதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால், வெட்ட வெட்ட முளைப்பதற்கு இது என்ன ஜி பூம்பா தலையா? இந்த முதலமைச்சருக்கு எரிகிற கொள்ளியில் எதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்ற பழமொழி தெரியாதா? கஞ்சா கடத்தலுக்கு மூலக் காரணம் யார்? யாரைப் பிடித்தால் இது குறையும் என்று தெரியாதா? புதிது புதிதாக போதைப் பொருள் வியாபாரிகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகுகிறார்கள், அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை இந்த அரசு ஒத்துக்கொள்கிறதா?

மேலும் படிக்க | டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

நடனமாடத் தெரியாத ஒருவர், "கூடம் கோணல்" என்று சொல்லுவது போல் தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முடியாத, இந்த கையாலாகாத அரசு போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை என்று நாடகமாடுவதை இத்துடன் கைவிட வேண்டும்.

 நான் ‘சாப்ட்’ முதலமைச்சர் அல்ல என்றும், சர்வாதிகாரி என்றும், வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு, இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க, ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைக் கையாண்டு, தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க, காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர், காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | RSS அமைப்பின் சமூக ஊடக பக்கங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News