சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்க பிரிவு மனு தாக்கல் செய்தது. ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தாகல் செய்த மனுவில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் செந்தில்பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்கவும் அமலாக்கப் பிரிவு மற்றொரு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுகள் நீதிபதி அல்லி முன்பாக இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டன. அமலாக்கப் பிரிவு காவல் கோரும் மனுவின் விசாரணையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டபோது, காவலில் செல்ல விருப்பமா என கேட்டபோது, விருப்பமில்லை என செந்தில்பாலாஜி பதிலளித்தார்.
மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறை செல்வது உறுதி: அண்ணாமலை
புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்க பிரிவின் துணை இயக்குனர் கார்த்திக் தாசரி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர் நடைபெற்ற வாதங்களின் போது, வழக்கில் உண்மையை வெளி கொண்டுவர காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அமலாக்கப் பிரிவு தரப்பில் வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜி 19 மணி நேர விசாரணைக்கு பிறகே கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனால் அமலாக்க பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என்றும் வாதிடப்பட்டது. மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொண்டு இடக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது. மேலும் இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவு குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
அமலாக்க பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிபதி உத்தரவை கேட்ட செந்தில் பாலாஜி தனது உடல்நிலை சரியில்லை என்றும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் நீதிமன்ற காவலில் அனுப்பக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தார். பின்னர் அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிட வேண்டும் என்றும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் அனுமதித்ததையும் நீதிபதி கவனத்திற்கு கொண்டு வந்தனர். மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கும் என்றும் அச்சம் தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை விசாரணையில் அசவுகரியும் ஏதும் ஏற்பட்டால் செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.
சென்னையின் அமலாக்க இயக்குனரகத்தின் துணை இயக்குநர் ஸ்ரீ.கார்த்திக் தாசரிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விதித்துள்ள நிபந்தனைகள்.
1. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவரை வெளியே அழைத்துச்செல்லக்கூடாது.
2. குற்றம் சாட்டப்பட்டவரின் உடல்நிலை குறித்தும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் குழுவிடம் இருந்து தேவையான ஆலோசனை கருத்தைப் பெற்ற பிறகு, அவரது உடல் நலக்குறைவு மற்றும் மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவரை மருத்துவமனையில் விசாரிக்க வேண்டும்.
3. குற்றம் சாட்டப்பட்டவரின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு எந்தத் இடையூறும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்க வேண்டும்.
4. குற்றம் சாட்டப்பட்டவருக்கு போதிய உணவு ,இருப்பிடம் வழங்க வேண்டும், மூன்றாம் தர விசாரணை முறையைப் பயன்படுத்தக்கூடாது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரை எந்தவிதமான துன்புறுத்தலும் செய்யக்கூடாது.
5. அவரை மிரட்டவோ அச்சுறுத்துவோக் கூடாது.
6. குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்டு, காவலின் போது குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும்.
7. குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் இருக்கும்போது அவருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவேண்டும்.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி... காவலில் எடுக்க உத்தரவு - நீதிபதி அதிரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ