ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2000 பணம் வரும் பிப்ரவரி 24 துவங்கி 28-ஆம் தேதிக்குள் செலுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்!
ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2000 வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதிக்குள்ளாக அனைத்து ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்குகளிலும் ரூ 2000 செலுத்த முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி 28ம் தேதிக்குள்ளாக அனைத்து ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்குகளிலும் ரூ 2000 செலுத்த தமிழக அரசு முடிவு.
— AIADMK (@AIADMKOfficial) February 20, 2019
முன்னதாக., ஏழை தொழிலாளர்களில் வங்கி கணக்கில் இம்மாத இறுதிக்குள் தலா 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய திமுக உறுப்பினர் பொன்முடி, தொழிலாளர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் எனும் அறிவிப்பு தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டதாக நாளிதழ்கள் செய்தி வெளியானதாக தனது கருத்தினை முன்வைத்தார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிச்சாமி, வறுமை கோட்டுக்கு கீழே உள்ள தொழிலாளர்களின் நலனை மனதில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும், ஏழைகளின் நலனை கருதி அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தேர்தலுக்கானது அல்ல என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து இத்திட்டத்தின் கீழ் பயனடையும் ஏழை தொழிலாளர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி ஆயுத்தப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 2000 பணம் வரும் பிப்ரவரி 24 துவங்கி 28-ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.