சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைவருக்கும் உள்ளது -வைகோ

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 9, 2019, 05:09 PM IST
சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைவருக்கும் உள்ளது -வைகோ title=

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களின் மனதில் கவலை ஊட்டிய பாபர் மசூதி பிரச்சினைக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

90-களின் தொடக்கத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு திரண்டு, பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததை தவறு என்று உச்சநீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் கூறி இருக்கிறது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன்பு கோவில் இருந்ததற்கான ஆதாரம் துல்லியமாகக் காட்டப்பட வில்லை என்றும் கூறி இருக்கிறது.

இச்சூழலில்தான் 2010, செப்டம்பர் 30 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வழங்கி இருந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்றும், மூன்று மாதத்திற்குள் அதற்கு ஒரு அறக்கட்டளை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது.

இசுலாமியர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள வக்பு வாரியம் போர்டு ஏற்கும் இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கின்றது.

உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என்று ஜாமியத் உலமா - இ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி அவர்கள் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி, தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் அகில இந்தியத் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று நான்கு நாட்களுக்கு முன்பே கூறி உள்ளார்.

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு அரணாக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இருப்பதை கடந்தகால வரலாறு காட்டுகிறது. மதங்களைக் கடந்த மனிதநேய உணர்வு இந்த மண்ணில் கலந்து இருக்கிறது. எனவே மத நல்லிணக்கம் சீர்குலைய வழிவகுத்துவிடாமல், எதிர்காலத்தில் சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைத்துத் தரப்பினருக்கும் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News