கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் பாமக தலைவர் ராமதாஸ், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிர்வாக சீர்க்கேட்டின் பேரவலத்துக்கு இதுவே சான்று என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவி விலகச் சொல்பவர்கள், இப்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது கள்ளச்சாராயம் குடித்து 100 பேர் இறந்துபோனார்களே, அப்போது அவர் பதவி விலகினாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தொடர்ந்து பேசிய இளங்கோவன், " யாரு ஆட்சி செய்தாலும் இந்த மாதிரி வருத்தமான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இப்படியான சமூகவிரோத செயல்களை சில பேர் எப்போதும் செய்கின்றார்கள்.
ஆனால் இந்த முறை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை நம்முடைய முதல்வர் எடுத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்கள் சென்று சந்தித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் வகையில் எல்லா ஏற்பாடுகளையும் அமைச்சர்கள் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல நம்முடைய முதலமைச்சரை பொறுத்தவரை குறிப்பிட்ட சில அதிகாரிகளை தண்டித்திருக்கின்றார். சஸ்பெண்ட் செய்து இருக்கிறார். டிஸ்மிஸூம் செய்து இருக்கிறார். அவர் நடவடிக்கை எடுக்கும்போது எல்லோரும் அவருக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமே தவிர இதை ஒரு மலிவான அரசியலாக செய்யக்கூடாது.
முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் சொல்வதெல்லாம் ஏற்புடையதல்ல. குஜராத்தில் கிட்டத்தட்ட 100 பேர் மோடி அவர்கள் முதல்வராக இருக்கும்பொழுது இறந்து போனார்கள். அவர்கள் எல்லாம் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு இறந்து போணர்கள். அப்போது மோடி அவர்கள் ராஜினாமா செய்தாரா?, எல்லா ரயில்களையும் நானே பச்சைக் கொடி காட்டி துவக்கி வைப்பேன் என்று சொன்னவர் ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தபோது பிரதமர் மோடி அவர்கள் ராஜினாமா செய்தாரா?. இதுபோன்ற நிகழ்வில் முதலமைச்சரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்வது காழ்புணர்ச்சியை காட்டுகிறதே தவிர, அது ஒரு நியாயமான அரசியல் கிடையாது" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கள்ளச் சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம்: நடிகர் சூர்யா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ