தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி இன்று கூறியதாவது:-
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தேவையான அளவு மழை கிடைத்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பல வருடங்களுக்கு இந்த ஆண்டு மழை நிறைவாக பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வெப்பசலனம் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்திலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு இருப்பதால் அடுத்த 24 மணிநேரத்துக்கு மீனவர்கள் இந்த கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்
.
தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாகவே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.