நாளையும் விடுமுறை... வார முழுவதும் நீட்டிக்க வாய்ப்பா... அரசு அறிவிப்பு என்ன?

Chennai Floods: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 5, 2023, 12:49 PM IST
  • பொது விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
  • அடையாற்றை ஒட்டிய இடங்களிலெல்லாம் வெள்ளம் புகுந்துள்ளது.
  • பொது போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
நாளையும் விடுமுறை... வார முழுவதும் நீட்டிக்க வாய்ப்பா... அரசு அறிவிப்பு என்ன? title=

Chennai Floods, School College Leave: மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (டிச. 4), இன்றும் (டிச.5) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை (டிச. 6) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 

எனவே, பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை நாளை முதல் இயல்பாக இயங்கலாம் என தெரிகிறது. குறிப்பாக சென்னையில் அடையாற்றின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அடையாற்றை ஒட்டிய இடங்களிலெல்லாம் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. மழை வெள்ளம் மெதுவாக வடிந்து வருவதால் மோட்டர் மூலம் நீரை வெளியேற்றவும் பணிகள் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | 2015 செயற்கை வெள்ளம்... இது இயற்கை வெள்ளம் - ஸ்டாலினின் விளக்கம் என்ன?

குறிப்பாக, வடசென்னை பகுதிகள், அசோக் நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, சூளைமேடு உள்ளிட்டவை மழைநீரில் மிதக்கிறது. இங்கு படகுகள், டிராக்டர்கள் மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர் முழுவதும் மரம் விழுந்துள்ள நிலையில், அவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 411 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 12,729 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தெரிவித்தார். மேலும், முகாம்களுக்கு வராமல் வீட்டிலேயே சிக்கி உள்ள மக்குக்கு மொத்தம் 11 லட்சத்து உணவு பொட்டலங்கள் அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த காலங்களை விட தற்போது பாதிப்புகள் குறைந்துள்ளதாகவும், மக்கள் தொடர்ந்து தங்களது ஒத்துழைப்பை தரும்பட்சத்தில் விரைவாக நிவாரணம் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். 

தற்போது நிலைமை சீராக ஒரு வாரம் ஆகலாம் என கூறப்படும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நான்கு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பலரையும் ஏமாற்றமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தனியார் அலுவலகங்கள் நாளையும் இயங்கும்பட்சத்தில் பலரும் கடுமையான சிரமத்திற்கு ஆளாவார்கள். கடந்த சில நாள்களாக மின்சாரம் இன்றி கடுமையான அவதியில் இருந்த மக்கள், இயல்பு வாழ்க்கை திரும்பாத நிலையில், பணிக்கு திரும்புவது கடினமான ஒன்றாகும். 

பொது போக்குவரத்தை பொருத்தவரை இன்றும், நேற்றும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மெட்ரோ ரயில்களின் சேவை மட்டும் தடையின்றி அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தும் சேவைகளும் இன்று முதல் தொடங்கும்பட்சத்தில் மக்களுக்கு போக்குவரத்தில் பாதிப்பிருக்காது. முக்கிய சாலைகளில் நீர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மிக்ஜாம் புயலின் கோர ஆட்டம்... ஊர் முழுக்க தண்ணீர் - சென்னையின் இப்போதைய நிலை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News