தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது: இராமதாசு

தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேட்டுக்கொண்டுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 12, 2019, 03:21 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது: இராமதாசு title=

தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேட்டுக்கொண்டுள்ளார். 

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்திலும், அதையொட்டிய புதுச்சேரி ஒன்றியப் பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் வளம் குறித்து 32 இடங்களில் ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது. விவசாயத்தை அழிக்கும் வகையிலான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டில் மத்திய அரசு தொடர்ந்து திணித்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும்  ஹைட்ரோ கார்பன் வளங்கள் இருப்பதை அறிந்துள்ள மத்திய அரசு, அவற்றை வணிக அடிப்படையில் பயன்படுத்தும் நோக்குடன் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உரிமங்களை வழங்கி வருகிறது. அண்மையில் வேதாந்தா நிறுவனத்திற்கு இரண்டு உரிமங்களும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஓர் உரிமமும் வழங்கப்பட்டன. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தின்படி  கடலூர், நாகை மாவட்டத்தில் 67 இடங்களில் ஆய்வு நடத்த அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது.

அதேபோல், வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தின் அடிப்படையில் மொத்தம் 116 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் முதல்கட்டமாக 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்கான அனுமதியைத் தான் மத்திய அரசு இப்போது வழங்கியுள்ளது. மீதமுள்ள 84 இடங்களில் ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிவதற்கான ஆய்வுக்கும் அடுத்த சில நாட்களில் அனுமதி அளிக்கப்பட்டு விடும். அடுத்த சில வாரங்களில் கடலூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் வளங்களை  எடுப்பதற்காக ஆயத்தப் பணிகள் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பணிகள்  தொடங்கினால், அப்பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்று உழவர்கள் அஞ்சுகின்றனர்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதே மிகவும் ஆபத்தானது; அதிலும் இந்தத் திட்டத்தை வேதாந்தா நிறுவனத்திடம் ஒப்படைப்பது இன்னும் பல மடங்கு ஆபத்தானது ஆகும்.  ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது அதனால் சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி வேதாந்தா நிறுவனம் கொஞ்சமும் கவலைப்படாது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை அமைத்து அப்பகுதியில் சுற்றுச்சூழலையை நாசப்படுத்தியதுடன், கடல்வாழ்  உயிரினங்கள் அழிவதற்கு காரணமாக இருந்தது இதே வேதாந்தா நிறுவனம் தான். அந்த நிறுவனத்திற்கு  கொடுத்துள்ள அனுமதியால் விழுப்புரம் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்த ஆய்வுகளுக்கு அனுமதி அளிப்பது என்பது மத்திய அரசு உறுதியளித்த நிலைப்பாட்டுக்கு எதிரானது ஆகும். நாடாளுமன்ற மக்களவையில் இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தருமபுரி மக்களவை உறுப்பினர் வினாவுக்கு விடையளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,‘‘ காவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது’’ என்று பலமுறை பதிலளித்திருந்தார். ஆனால், அதற்கு முற்றிலும் எதிரான வகையில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பதை ஏற்கவே முடியாது.

தமிழகத்திற்கு உணவு படைக்கும் நெற்களஞ்சியமாக திகழ்வது காவிரி பாசன மாவட்டங்கள் தான். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களும் அவற்றின் நீட்சியாக விவசாயத்தில் செழிக்கின்றன. அந்தப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தினால், அந்த மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை  தடுக்க முடியாது. இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  அதை மதிக்காமல் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிப்பது தமிழகத்தை அவமதிக்கும் செயலாகும்.

தமிழகத்தின் வேளாண் மண்டலங்கள் தொடர்ந்து அதே நிலையில் நீடிப்பதையும், பாலைவனங்களாக மாறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன்  திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்று மத்திய மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அத்துடன், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும்.

Trending News