தங்கமணி ஊழலை ஆதாரத்துடன் பட்டியலிட்ட M.K.ஸ்டாலின்..!

ஒரு வாரத்தில் என்மீது மின்துறை அமைச்சர் தங்கமணி வழக்கு போடவில்லை என்றால் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ வரை  கொண்டுசெல்வோம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2018, 01:25 PM IST
தங்கமணி ஊழலை ஆதாரத்துடன் பட்டியலிட்ட M.K.ஸ்டாலின்..!  title=

ஒரு வாரத்தில் என்மீது மின்துறை அமைச்சர் தங்கமணி வழக்கு போடவில்லை என்றால் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ வரை  கொண்டுசெல்வோம்

காற்றாலை மின்சார ஊழலில் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரத்தை நான் வெளியிட்டுள்ளேன் என  தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் காற்றாலை மூலமாக தயாரிக்கப்படும் மின்சாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் தங்கமணி, "எதிர்கட்சித் தலைவர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் என்மீது குற்றம் சுமத்தியிருக்கிறார். தொடர்ந்து இவ்வாறு கூறி வந்தால் அவர் மீது வழக்கு தொடர்வேன்" என பதிலளித்திருந்தார். 

இது குறித்து அவர் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, “காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை” என்று, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை மின்துறை அமைச்சர் திரு தங்கமணி அவர்கள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, பேட்டி என்ற பெயரில் அளித்திருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு ஊழல் புகாரை வெளியிடும் போது ஆதாரங்களை மறைத்து பதில் கொடுப்பது அமைச்சருக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு தான் அறிக்கை விடுவேன் என்பது கூடத்தெரியாமல் - அல்லது புரியாமல், அமைச்சர் காற்றாலை தொடர்பான இமாலய ஊழலை மறைக்க முயற்சிக்கிறார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள திருநெல்வேலி மண்டல ஆடிட் பிராஞ்சின் உதவி ஆடிட் அதிகாரி தனது அறிக்கையில், “உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் 9 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலி ஒதுக்கீடு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த 9 கோடி ரூபாயை மின்வாரியம் கொடுக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் 22 சதவீத வட்டியுடன் உடனடியாக வசூல் செய்ய வேண்டும்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ள வரிகளை ஆதாரத்துடன் சொல்வது என்றால், “Bogus Energy allotment made without generation” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அந்த ஆடிட் அதிகாரி அறிக்கை கொடுத்த பிறகும், ஊழல் நடக்கவில்லை என்று மின்துறை அமைச்சர் மறைக்க வீணே முயற்சி செய்வதில்தான், ஊழலின் மொத்த உருவமுமே மறைந்திருக்கிறது. மின் வாரியத்திற்கு ஏதும் பிரச்சினையில்லை என்றால், 9 கோடி ரூபாயை வசூல் செய்யுங்கள் என்று ஆடிட் அதிகாரி கூறியிருப்பது ஏன்?

அமைச்சர் தன் பேட்டியில் “இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்” என்று மூடி மறைக்கிறார். அப்படியென்றால், மின்பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி வட்டார மேற்பார்வைப் பொறியாளர் கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

அதுவும் உற்பத்தி ஆகாத காற்றாலையில் மின்சாரம் பெறப்பட்டதாக ஏன் கடிதம் எழுதப்பட்டது? அந்த மேற்பார்வைப் பொறியாளர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

அதேபோல், தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரத்திற்கு அமைச்சர் தன் பேட்டியில் கூறியிருப்பது போல், 11 கோடி ரூபாய் பணம் செலுத்தக்கோரி மின் பகிர்மானக்கழகம் இப்போது டிமான்ட் நோட்டீஸ் அனுப்பியது ஏன்?

ஆகவே, காற்றாலை மின்சாரத்தில் “போலி ஒதுக்கீடு கணக்கு” காட்டி ஊழல் நடந்திருப்பது ஆதாரபூர்வமானது. இதோ ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறேன்.

ஊழல் நடக்கவில்லை என்று இப்போதும் அமைச்சர் கூறுவாறேயானால், மின்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, காற்றாலை மின்சாரத்தில் “போலி ஒதுக்கீடு” கணக்குக் காட்டி நடைபெற்றுள்ள ஊழல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடத் தயாரா?

இதை தொடர்ந்து  ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில்., "காற்றாலை மின்சார ஊழல் தொடர்பாக நான் வெளியிட்ட நீண்ட அறிக்கைக்கு அமைச்சர் தங்கமணி இதுவரை பதிலளிக்கவில்லை. என்னிடம் ஆதாரம் இல்லை என்று கூறுகிறார். ஆதாரம் என்னிடம் இருப்பதாலேயே நான் பேசுகிறேன்.அந்த ஆதாரம் தொடர்பாக விசாரிக்கும்படி நான் கூறி அதனை வெளியிட்டுளேன். இப்போது தங்கமணி என் மீது வழக்குத் தொடரத் தயாரா? அவருக்கு நான் ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கிறேன். அவர் அதற்குள் என்மீது வழக்கு தொடர வேண்டும்.அன்பைன்னர் நான் அமைச்சர் தங்கமணி மீது வழக்குத் தொடருகிறேன்" என்றார்.

 

Trending News