அண்ணாவை போல சர்வாதிகாரியாக இருக்க விரும்புகிறேன் -ஸ்டாலின்!

அண்ணாவை போல் தான் சர்வாதிகாரியாக இருக்க விரும்புவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

Last Updated : Nov 13, 2019, 07:59 AM IST
அண்ணாவை போல சர்வாதிகாரியாக இருக்க விரும்புகிறேன் -ஸ்டாலின்! title=

அண்ணாவை போல் தான் சர்வாதிகாரியாக இருக்க விரும்புவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின், சமீபத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழு நிகழ்வுகள் குறித்து தொண்டர்களுக்கு விளக்கும் வண்ணம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.,
 
திமுக-வின் வரலாற்றில் ஒவ்வொரு பொதுக்குழுவுமே எழுச்சிமிக்க ஒரு புதிய அத்தியாயம்தான். நவம்பர் 10-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் திமுக-வின் சட்டவிதிகளில் காலத்தின் தேவைக்கேற்ப செய்யப்பட்ட திருத்தங்களும், நமக்கான பொறுப்புகளை உணர்ந்து, பணியினைத் தொடர்ந்திட ஊக்கமளிக்கக்கூடியவையாக அமைந்துள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் ஒவ்வொருவரின் இதயத் துடிப்பையும், உங்களின் இதயத்துடிப்பாக இருக்கும் கட்சியின் நலன் - முன்னேற்றம் ஆகியவற்றை மனதில் கொண்டும், கொண்டுவரப்பட்ட திருத்தம்தான், ஊராட்சிக் கழகங்கள் என்ற நிலைக்குப் பதில், கிளைக் கழகங்கள் மீண்டும் தொடங்கப்படும் என்கிற திருத்தமாகும்.

12,600 ஊராட்சிக் கழகங்கள் இருந்த நிலையில், அவற்றுக்கு மாறாக 1 லட்சத்துக்கும் அதிகமான கிளைக் கழகங்கள் உருவாகப் போகின்றன. அத்துடன், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 உறுப்பினர்கள் கொண்ட குழு, 10 ஊராட்சிக் கழகங்களுக்கு ஓர் ஒன்றியம் போன்ற திருத்தங்கள் கட்சியின் ரத்தநாளங்களைச் சீராக்கி, மேலும் செம்மையாகச் செயல்படுவதற்கான கட்டமைப்பாகும்.

திமுக-வின் செயல் தலைவராக இருந்து மாவட்டங்கள் தொடங்கி கிளைக் கழகங்கள் வரை ஆய்வுக்கூட்டங்களை நடத்தியபோது, கட்சியின் நலன் காக்க சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தேன். அதையேதான் திமுக பொதுக்குழுவிலும் மீண்டும் நினைவூட்டினேன்.

எந்த இயக்கத்திற்கும் வெளிப்பகை உள்பகை என 2 உண்டு. வெளிப்பகை என்பது கண்களுக்குப் புலப்படக்கூடியது. அதனை எதிர்கொண்டு வெல்ல முடியும். உள்பகை என்பது அத்தனை எளிதாகக் கண்களுக்குப் புலப்படாது. புரையோடி அது நம்மையே அழித்துவிடும். அதனால்தான், ‘பாழ் செய்யும் உட்பகை’ என்ற சொற்றொடரைத் தலைவர் கருணாநிதி நமக்கு அடிக்கடி நினைவூட்டுவார். இன்றைய நிலையில், வெளிப்பகை நம் மீது அவதூறுகளை அள்ளிவீசி அழிக்க நினைக்கிறது. அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றால், உள்பகை இல்லாத உன்னத நிலையை கட்சியில் உருவாக்கிட வேண்டும். அதைத்தான் பொதுக்குழுவில் உரையாற்றிடும்போது எடுத்துரைத்தேன்.

இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரில் அண்ணாவை சர்வாதிகாரியாக தந்தை பெரியார் நியமித்து, போராட்டத்தை வழிநடத்திடச் செய்தார். அதற்காக அண்ணா ஆயுதம் ஏந்தவில்லை. அடக்குமுறை செய்யவில்லை. அன்பும் அறிவும் கொண்டு போராட்டத்தை நடத்தினார். அண்ணா வழிதான் நம் வழி. அந்த வழியில் தொடர்ந்த கருணாநிதியின் பாதையில் பயணிப்போம். திசைதிருப்ப நினைப்போரைப் புறக்கணிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News