இனிவரும் காலங்களில் மக்கள் தேவையின்றி வெளியில் வராமல் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து கொரோனா வைரஸ் நோயை விரட்ட ஒத்துழைக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... இந்தியாவில் கொரோனா வைரஸ் வளர்ச்சி விகிதம் 40% குறைந்திருப்பதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் இந்த வேகம் மேலும் குறைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருப்பது நிம்மதியளிக்கிறது. அதேநேரத்தில் இது ஆறுதல் அடைவதற்கான தகவல் தானே தவிர, அசட்டையாக இருப்பதற்கான நேரமல்ல என்பதை உணர்ந்து கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக கொரோனா வைரஸ் பரவல் 3 நாட்களில் இரட்டிப்பாகி வந்ததாகவும், கடந்த ஒரு வாரத்தில் இவ்விகிதம் 6.2 நாட்களாக அதிகரித்து இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயின் வளர்ச்சி விகிதம் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முந்தைய இரு வாரங்களில் 2.1% என்ற அளவில் இருந்ததாகவும், ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களில் இவ்விகிதம் 1.2% ஆக குறைந்து விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது ஊரடங்கு செயல்படுத்தப்பட்டதால் கிடைத்த நன்மை ஆகும்.
நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் விகிதம் சற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களில் எந்த மாவட்டத்திலும் கொத்துக் கொத்தாக கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, கடந்த 5 நாட்களாக கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தேசிய அளவில் கொரோனா வைரஸ் பரவல் இரட்டிப்பாவது 3 நாட்களில் இருந்து 6.2 நாட்களாக அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா இரட்டிப்பாகும் காலம் 7 நாட்களில் இருந்து 10 நாட்களாக அதிகரித்திருக்கிறது. தேசிய சராசரியுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையே இந்த தகவல்கள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களில், சராசரியாக ஒரு நாளைக்கு 37.50 பேர் 150 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் கடந்த 4 நாட்களில் 202 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது ஒவ்வொரு நாளும் சராசரியாக 50.50 பேர் வீதம் குணமடைந்துள்ளனர். இந்த கால இடைவெளியில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 3 என்ற அளவிலேயே உள்ளது. தமிழகத்தில் எந்த பகுதியிலும் புதிதாக மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று ஏற்படாத பட்சத்தில், இதேநிலை தொடர்ந்து நீடித்தால் மே 3-ஆம் தேதி ஊரடங்கு ஆணை முடிவுக்கு வருவதற்குள் கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விடும் என்று சென்னையில் உள்ள கணித அறிவியல் கழகம் மதிப்பீடு செய்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகம் விரைவில் மீளும் என்ற நம்பிக்கையை இந்த புள்ளிவிவரங்கள் விதைக்கின்றன.
அதேநேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த விவகாரத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் இப்போது கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளில் சிறிய தளர்வு ஏற்பட்டால் கூட, அது சமூக பரவல் என்ற நிலைக்கு தமிழகத்தை அழைத்துச் சென்று விடும். அதன்பின்னர் நிலைமையை சமாளிப்பது சாத்தியமற்றதாகி விடும். அதுமட்டுமின்றி, கொரோனா பரவல் தொடர்பான புதிய ஆராய்ச்சி முடிவுகள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. கனடா நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் மனிதர்கள் தும்மும் போதும், இருமும் போதும் வெளியாகும் சளித்திவலைகள் 3 வினாடிகளில் 6 அடிகளுக்கும் அதிக தொலைவுக்கு பயணிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சளித்திவலைகள் அதிகபட்சமாக 3 அடி தூரம் மட்டுமே செல்லும் என்ற நம்பிக்கையில், அந்த தொலைவை மட்டுமே நாம் சமூக இடைவெளியாக கடைபிடித்து வருகிறோம். இந்த புதிய ஆராய்ச்சி முடிவையும் கருத்தில் கொண்டு, கூடுதல் இடைவெளியை கடைபிடிப்பது பாதுகாப்பானதாக இருக்கும்; அதற்கெல்லாம் மேலாக வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருப்பது இன்னும் சிறந்ததாக அமையும்.
தமிழகத்தின் தலைநகரம் தொடங்கி சிறிய கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் காய்கறிகள், மளிகைப் பொருட்கள், பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்க உள்ளாட்சி அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், வணிக அமைப்புகளும் ஏற்பாடு செய்துள்ளன. எனவே, இனிவரும் காலங்களில் மக்கள் தேவையின்றி வெளியில் வராமல் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து கொரோனா வைரஸ் நோயை விரட்ட ஒத்துழைக்க வேண்டும்.