ஆயுதங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் ஜல்லிக்கட்டு எப்படி ஆபத்தாகும் ? உச்சநீதிமன்றம் கேள்வி

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Dec 9, 2022, 03:53 PM IST
  • ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு
  • உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு
  • தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
ஆயுதங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் ஜல்லிக்கட்டு எப்படி ஆபத்தாகும் ? உச்சநீதிமன்றம் கேள்வி title=

ஜல்லிக்கட்டு என்பது பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் நடத்தப்படும் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு ஆகும். ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது. நீதிபதி கே.எம்.ஜோசஃப்போடு, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி ரவிக்குமார் ஆகியோரும் இந்த அமர்வில் இடம் பெற்றுள்ளனர். 

பீட்டா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜரானார். ஜல்லிக்கட்டு என்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய விளையாட்டு எனவும், இதுபோன்ற விளையாட்டுகள் உலகம் முழுவதும் நிகழ்வதாகக் குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், இதில் விளையாடும் வீரர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தாத நிலையில், எவ்வாறு  இதனை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விளையாட்டு என்று கூறுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.  

அதற்கு பதிலளித்த ஷியாம் திவான், அப்பாவி விலங்குகளை கொல்வது மற்றும் காயப்படுத்தும் விளையாட்டுகள் ஆபத்தான விளையாட்டுகள் எனக் கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு அரங்கிலும், வெளியேயும் பார்வையாளர்கள் காயமடைவது குறித்த நிகழ்வுகளை ஊடகங்கள் ஆவணப்படுத்தியுள்ளன என்றும் திவான் கூறினார். 

மேலும் படிக்க | ஜல்லிக்கட்டில் விதிமீறலும், கொடூரமும் இல்லை - உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் மரணம் நிகழ்வதனாலேயே அவை உயிருக்கு ஆபத்தான விளையாட்டு என்று அர்த்தமல்ல எனவும், காளைகளை காயப்படுத்தும் நோக்கில் வீரர்கள் பங்கேற்பதில்லை எனவும் தெரிவித்தனர். காயமோ, உயிரிழப்போ தற்செயலாக நிகழ்வதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் தவறானது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வர முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

இவ்வழக்கில் தமிழக அரசு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ அறிக்கையில், "ஜல்லிக்கட்டு" என்பது ஒரு கலாச்சார விழா எனவும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளை ஜல்லிக்கட்டு மீறவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய மற்றொரு வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, ஜல்லிக்கட்டு என்பது ஒரு கலாச்சாரம் என்று சட்டமன்றம் கூறுவதால் மட்டும் அதனை கலாச்சாரமாகக் கருத முடியாது எனவும், அதற்கு சில அடிப்படைகள் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

"தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம், இயல்பிலேயே கொடூரமான செயலை சட்டப்பூர்வமாக்க முயல்வதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் என அனைத்து தரப்பும் இரண்டு வாரத்தில் எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஜல்லிக்கட்டு வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க | வைகை ஆற்றில் வாடிவாசல் - காளைகளை அடக்கி விளையாடும் சிறுவர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News