திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என ஜெயக்குமார் எம்.பி. மக்களவையில் வலியுறுத்தினார்!
மக்களவையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில், இதனைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார், தனது தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக மருத்துவ ஆணைய மசோதா நிறைவேறியபோது சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் உரையாற்றினார். தனது உரையின் போது குறைந்தது 300 படுக்கைகளை கொண்டதாக ஒரு அரசு மருத்துவமனை இருந்தால், அங்கு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதனை வாதிட்ட திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார், '370 படுக்கைகளை கொண்டதாக திருவள்ளூர் அரசு மருத்துவமனை உள்ளது. ஆனால், 22 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட திருவள்ளூர் தொகுதியில் 110 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் எந்த அரசு மருத்துவக் கல்லூரியும் இல்லை. எனவே எனது தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். மாநில அரசும் உதவினால் திருவள்ளூரீல் அரசு மருத்துவக் கல்லூரி அமைவது நிச்சயம் என தெரிவித்தார்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் இன்று நிறைவேறிய நிலையில், மருத்துவ கல்வி துறையில் பல்வேறு சீர் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், இந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி தற்போது உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படும். அதற்கு ஆலோசனை வழங்க குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.