குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது... தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Kumari Ananthan: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு 2024ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 1, 2024, 02:21 PM IST
  • குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
  • ஆக. 15ஆம் தேதி அன்று முதல்வர் இந்த விருதை வழங்குவார்.
  • 2021ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது... தமிழ்நாடு அரசு அறிவிப்பு! title=

Kumari Ananthan: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு 2024ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. வரும் ஆக். 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 'தகைசால் தமிழர்' என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டில் அறிவித்திருந்தார்.

கடந்த 3 ஆண்டுகளில்...

இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில் சங்கரைய்யா, ஆர். நல்லகண்ணு, கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக. 1) நடைபெற்றது.

மேலும் படிக்க | வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள் - ஆக்‌ஷன் எடுக்குமா அரசு?

தகைசால் தமிழர் விருது 2024

அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் குமரி அனந்தனை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான 'தகைசால் தமிழர்' விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

'தகைசால் தமிழர்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தன் அவர்களுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆக.15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்" என்றார்.

யார் இந்த குமரி அனந்தன்?

91 வயதான குமரி அனந்தன் 1977ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொகுதி மறுசீரமைப்புக்கு பின் நாகர்கோவில் தொகுதி நீக்கப்பட்டு, கன்னியாகுமரி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. அதன்பின், குமரி அனந்தன் சட்டமன்ற தேர்தலில் 1980ஆம் ஆண்டு முதல்முறையாக போட்டியிட்டார். 1980இல் திருவொற்றியூர், 1984இல் ராதாபுரம், 1989 மற்றும் 1991இல் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 

80 காலகட்டத்தில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியை தொடங்கிய இவர், அதன்பின் இந்திய தேசிய காங்கிரஸ் உடன் அதனை இணைத்தார். அதன்பின் தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்த அவர், மீண்டும் காங்கிரஸ் கட்சியிலேயே வந்து இணைந்துகொண்டார். இவரின் இளைய சகோதரரும், பெரும் தொழிலதிபருமான மறைந்த ஹெச். வசந்தகுமாரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வாகியிருக்கிறார். இவரின் மகள் தமிழிசை சௌந்திரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் இருந்தார். 

குமரி அனந்தன் அரசியல் தலைவர் என்பதை தாண்டி அவரின் பாதயாத்திரை, தமிழ் சொற்பொழிவுகள் ஆகியவற்றுக்கு மிகவும் பெயர் பெற்றவர். 29 நூல்களுக்கு ஆசிரியரான குமரி அனந்தன் இந்த வயதிலும் திறம்பட செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கிசுகிசு : கேபினட்டில் மாறும் முக்கிய தலைகளின் துறைகள்..! நம்பர் 2க்கான அறிவிப்பு ரெடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News