லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வீடுகள் எனக்காக திறந்திருக்கும்... எமோஷன் ஆன ராகுல் காந்தி!

Coimbatore INDIA Alliance Meeting: என் அரசு இல்லம் பறிக்கப்பட்டது ஆனால் அது தேவையில்லை என்றும் ஆனால் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் எனக்காக அவர்களின் வீடுகளை திறந்து வைப்பார்கள் என்றும் ராகுல் காந்தி கோவையில் பேசினார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 12, 2024, 09:34 PM IST
  • லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வீடுகள் எனக்காக திறந்திருக்கும்... எமோஷன் ஆன ராகுல் காந்தி
  • பிரதமர் மோடியின் முகத்திரை கிழிந்துவிட்டது - முதல்வர் ஸ்டாலின்
  • லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் எனக்காக அவர்களின் வீடுகளை திறந்து வைப்பார்கள் - ராகுல்
லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வீடுகள் எனக்காக திறந்திருக்கும்... எமோஷன் ஆன ராகுல் காந்தி! title=

Coimbatore INDIA Alliance Public Meeting: இந்தியா கூட்டணி சார்பில் கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியை வரேவேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். 

அப்போது, "ராகுல் காந்தியே வருக, புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என அழைக்கிறேன்..!" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாணியில் ராகுல் காந்திக்கு அழைப்புவிடுத்தார். 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியை தருக' என்ற கருணாநிதியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் மிகவும் பிரபலமானதாகும். ராகுல் காந்தியை இந்தியாவின் எதிர்காலம் என்றும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். 

பாஜக ஆட்சிக்கு வந்தால்...

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "கடும் நிதி நெருக்கடியிலும் பல மக்கள் நல, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இன்னும் எவ்வளவு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று நினைத்துப் பாருங்கள்.

மேலும் படிக்க | தமிழ்நாடுதான் டார்கெட்; ஆர்வமுடன் வரும் அமித் ஷா: முழு விவரம்

ரூ. 6500 கோடி முதலீட்டுடன் கோவைக்கு வந்த ஒரு பெரிய நிறுவனத்தை மிரட்டி குஜராத்துக்கு மாற்றியது பாஜக. இதுதான் கோவை மீது பாஜக வைத்துள்ள பாசம். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பாஜக அரசின் நடவடிக்கையால் ஏழை மக்களின் பாக்கெட்டில் இருந்த பணம் பறிக்கப்பட்டது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோவையின் அமைதியும், தொழில் வளர்ச்சியும் போய்விடும். பிரதமர் மோடியின் முகத்திரை கிழிந்துவிட்டது" என்றார். 

இது அதானியின் அரசு

அடுத்து பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தனது மூத்த சகோதரர் என்றழைத்தார். தொடர்ந்து வேறு எந்த அரசியல் தலைவர்களையும் நான் அண்ணன் என அழைத்ததில்லை என்றும் பேசினார். 

தொடர்ந்து ராகுல் காந்தி,"மோடியின் அரசு வீட்டுக்கு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு. அதானிக்காகவே எல்லாமே செய்கிறார் மோடி. சாலை, உள்கட்டமைப்பு, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதை மோடி கொடுத்துவிடுவார்.

நாடாளுமன்றத்தில் அதானி எப்படியெல்லாம் இந்த அரசின் சலுகைகளை பெறுகிறார் என பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. என் அரசு இல்லமும் பறிக்கப்பட்டது. உண்மையிலேயே எனக்கு அந்த வீடு தேவையில்லை, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் எனக்காக அவர்களின் வீடுகளை திறந்து வைப்பார்கள்.

இதுதான் பிரச்னை

பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோர் வெறும் அரசியல் தலைவர்கள் அல்ல, மக்களின் குரலாக இருந்ததால், அவர்கள் பேசியதை உலகமே கேட்டது. ஏன் தமிழ் மொழி மீது, தமிழ் வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? என மக்கள் மோடியை நோக்கி கேட்கிறீர்கள்.

தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவன் என பேசுகிறீர்கள்... மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்று கேட்கிறார்கள்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...

ஏன் 'ஒரே நாடு ஒரே மொழி' என ஒரு மொழிக்காக எப்போதும் பேசுகிறீர்கள். தமிழ், பெங்காலி, கன்னடா, மணிப்பூரி ஆகிய மொழிகளுக்கெல்லாம் ஏன் நீங்கள் பேசக் கூடாது?. தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலேயே அதுகுறித்த விபரங்கள் வெளியாகின.

ஏழை மக்களுக்காக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக எதுவும் செய்யவில்லை. நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கே விடப்போகிறோம். சமூக நீதியைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சாதிவாரி, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்றார்.  

மேலும் படிக்க | என் கனவு நமது கோவை .... அண்ணாமலை அளித்த 100 வாக்குறுதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News