மதுரை எய்ம்ஸ்: அறிவித்தது அத்தனை கோடி... ஆனால் கொடுத்தது இவ்வளவுதானா? - முழு விவரம்

Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு அறிவித்த மொத்த திட்ட தொகையில், இதுவரை வெளியிட்டுள்ள தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 27, 2023, 06:28 PM IST
  • 2014ஆம் ஆண்டில் இருந்து புதிய 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இதில், 6 மருத்துவமனைகளின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 2026ஆம் ஆண்டில் நிறைவடையும் என அறிவிப்பு.
மதுரை எய்ம்ஸ்: அறிவித்தது அத்தனை கோடி... ஆனால் கொடுத்தது இவ்வளவுதானா? - முழு விவரம் title=

Madurai AIIMS Hospital: AIIMS என்றழைக்கப்படும் அனைந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்), தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக்கல்லூரி குழுமம் ஆகும். உயர்தர மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் அமைக்க நீண்டநாள் கோரிக்கை இருந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் மருத்துவக்கட்டமைப்பு ஏற்கெனவே, மற்ற மாநிலங்களுடன் ஒப்பீட்டளவில் உச்சம்  தொட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கூடுதல் நன்மையை தரும் என கூறப்பட்டது. 

அந்த வகையில், தமிழ்நாட்டின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரூ. 1,200 கோடி என்பது 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், 1,970 கோடி ரூபாயாக திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டது. இந்த உயர்த்தப்பட்ட ரூ. 700 கோடியில் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 

எய்ம்ஸ் மருத்துவமனை என்பது காலப்போக்கில் அரசியல் ரீதியாக பெரும் விவாதமாகவும் எழுந்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதில், மத்திய பாஜக சுணக்கம் காட்டி, தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக திமுக போன்ற எதிர்கட்சிகள் முன்பிருந்தே குற்றஞ்சாட்டி வந்தனர். குறிப்பாக, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில், உதயநிதி ஒற்றை செங்கலை வைத்துக்கொண்டு, பாஜகவுக்கு எதிராக பேசியது பெரிதும் கவனம் ஈர்த்தது.

மேலும் படிக்க | வெறுப்பு அரசியலை தூண்டி பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறது: திருமாவளவன்

தற்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட திமுக, பாஜக ஆகிய இரு முகாம்களின் பரப்புரைகளிலும் மதுரை எய்ம்ஸ் குறித்த சலசலப்புகள் வந்தது. அந்தளவிற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மீது பெரும் அரசியல் வெளிச்சமும் எழுந்துள்ளது. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒட்டுமொத்த திட்ட மதிப்பீட்டில், மத்திய பாஜக அரசு ஒதுக்கியுள்ள தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஆந்திராவின் விஜயவாடா மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் எழுப்பிய கேள்வியில், மதுரை எய்ம்ஸ் குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது. 2014ஆம் ஆண்டு முதல், பிரதான் மந்திர் சுவஸ்தயா சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த பல்வேறு தகவல்களை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ரவி சங்கர் கடந்த நவம்பர் 21ஆம் தேதி, கோரியிருந்தார். 

அதற்கு, மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் பிப். 17ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட 16 புதிய மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டு, அதன் திட்ட மதிப்பீடு தொகை, திட்டத்திற்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, திட்ட நிறைவும் தேதி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளது. 

அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 1,977 கோடி நிதி மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இதுவரை ரூ. 12.35 கோடிதான் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ஆம் ஆண்டு அக்டோபரில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மொத்த 16 மருத்துவமனைகளில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குதான் அதிக தொகை (ரூ. 1,977 கோடி) அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2014ஆம் ஆண்டுக்கு பின் அறிவிக்கப்ட்ட இந்த 16 மருத்துவமனைகளில் உத்தரப் பிரேதேசத்தின் ரேபெரலி, ஆந்திராவின் மங்கலகிரி, மகாராஷ்டிராவின் நாக்பூர், உத்தரப்பிரதேசத்தின் கோரக்கபூர், பஞ்சாப்பின் பதிண்டா, ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்ப்பூர் இடங்களில் மருத்துவமனைகளின் கட்டுமான பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம், ஜம்மு, ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் இந்தாண்டு மார்ச், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நிறைவுபெற உள்ளன. தெலங்கானா எய்ம்ஸ் அடுத்தாண்டும், காஷ்மீர் எய்ம்ஸ் 2025ஆண்டும் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார், ஹரியானா மாநிலங்களில், மாநில அரசுகள் இலவச நிலங்கள் இன்னும் ஒதுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026 அக்டோபரில் முடிக்கப்படும்: மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News