இதுதொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நெல் மழையில் நனைவதாகவும், கால்நடைகள் கூட உண்ணுவதற்கு அரிசி லாயக்கற்றதாக உள்ளது என்று இந்திய உணவுக் கழகம் சான்று அளித்துள்ளதாகவும் மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே புளித்துப் போகுமளவிற்குச் செய்வதைப் போல் தான் வகிக்கின்ற பதவிக்குப் பொருத்தமில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறார். நெல்லை பாதுகாப்பாக வைக்காததால் சுமார் ஐந்தாயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எந்த ஊரில் எந்த இடத்தில் எவ்வளவு நெல் நனைந்துள்ளது என்று கூட குறிப்பிடாமல் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித்தலைவருமான இவர் அறிக்கை விடுவதை என்னவென்று சொல்வது?
பனிரெண்டு நாட்களுக்கு முன்பே இந்திய உணவுக் கழகம் குறிப்பிட்ட 92,500 கிலோவை 9 இலட்சம் மெட்ரிக் டன் என்று தவறாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி நான் அறிக்கை விட்ட பின்பும் அதைப் பற்றித் துளி கூட வருந்தாமல் மீண்டும், கால்நடைகள் கூட உண்ணுவதற்கு அரிசி லாயக்கற்றதாக உள்ளது என்று இந்திய உணவுக் கழகம் சான்று அளித்துள்ளதாக வாய் கூசாமல் உண்மைக்குப் புறம்பாக அறிக்கை விடுகிறார்.
மேலும் படிக்க | விஞ்ஞான ஊழலெல்லாம் திமுகவுக்கு கை வந்த கலை - ஜெயக்குமார் விமர்சனம்
தஞ்சாவூர் மாவட்டம் முன்னைப்பட்டியில் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளில் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன என்று மீண்டும் ஆதாரமின்றிப் புகார் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளைப் படித்துப் பார்த்தாலே எவ்வளவு மேலோட்டமாக உள்ளது என்பது தெரியும். அங்கு அதிகம் மழை பெய்வதாகச் செய்தி வந்தவுடனே வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் உடனே போர்க்கால நடவடிக்கை எடுத்து நெல்லைச் சேதமடையாமல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைத்தார். வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநரும் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்று நடவடிக்கைகளைத் துரிதப் படுத்தினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் இது தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் கோவில்பத்திலும் மயிலாடுதுறை மாவட்டம் எருக்கூரிலும் 1.5 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு அவற்றையும் பயன்படுத்த இயலாத நிலையில் விட்டுச் சென்று விட்டனர். இன்று தவறான தகவல்களுடன் எதை வைத்து எதற்காக அறிக்கை விடுகிறார் என்றே புரியவில்லை.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன்னார்வ நிறுவனங்களும் பொதுமக்களும் அனுப்பிய நிவாரணப் பொருட்களின் மீது தங்கள் படங்களை ஸ்டிக்கர் ஒட்டியவர்கள். விளம்பரத்தைத் துளியும் விரும்பாத நம் முதல்வர் மீது “போட்டோ ஷுட்” நடத்தி விளம்பரம் செய்கிறார் என்று பொய்க் குற்றச்சாட்டைப் பொறாமையின் காரணமாகக் கூறி தனது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் படத்தைப் போட்ட பள்ளிக்கூடப் பைகளையே தான் ஆட்சிக்கு வந்த பிறகும் விநியோகிக்க அனுமதித்த பெருந்தகையாளர் எங்கள் முதலமைச்சர். அவர்களைப் பார்த்து வாய் கூசாமல் பேசுகின்ற எதிரிக்கட்சித் தலைவர் போல செயல்படும் எதிர்க்கட்சித் தலைவர், தன் செயலை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விட்டுச் செல்லும் போது 17 லட்சம் டன் நெல்லை அரைக்காமல் திறந்தவெளியில் வைத்துவிட்டுச் சென்றதையும் சேர்த்து 59 இலட்சம் டன் நெல்லை இதுவரை அரைத்துள்ளோம். அனைத்து அரிசி அரவை ஆலைகளிலும் கலர்சார்ட்டர் பொருத்த வேண்டும் என அதிமுக ஆட்சியில் இந்திய உணவுக் கழகம் அறிவுறுத்தியும், 106 ஆலைகளில் மட்டுமே கலர்சார்ட்டர் பொருத்தப்பட்டு அதுவும் பயன்படுத்தப்படாமல் இருந்தது.
மேலும் படிக்க | பிரதமரையும் மத்திய அரசையும் வம்புக்கு இழுக்காதீங்க - வானதி சீனிவாசன்
முதல்வர் அவர்களின் ஆட்சியில் ஏனைய ஆலைகளையும் சேர்த்து 632 அரவை ஆலைகளிலும் கலர் சார்ட்டர் பொருத்தி இன்றைக்குத் தரமான அரிசியை வழங்கி வருகிறோம். இது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். பொறாமை பிடித்தவர்கள் வேண்டுமானால் தெரிந்தும் தெரியாமல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கலாம். அவதூறு பேசுபவர்களை அலட்சியப்படுத்திவிட்டு கண்ணியத்துடன் நம் முதல்வர் தலைமையிலேயே விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து கடமையாற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ