சென்னை: தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இ.அகமது திடீர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்ந்த 1967 ஆம் வருடம் முதன் முதலில் கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அகமது கேரள மாநிலத்தின் தொழில்துறை அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக, மத்திய இணை அமைச்சராக தன் மாநிலத்திற்காகவும், நாட்டுக்காகவும் அரும் பணியாற்றியவர்.
தலைவர் கலைஞரின் மிக நெருங்கிய நண்பராக இருந்த அவர் சென்னை வரும் போதெல்லாம் தலைவரை வந்து சந்திக்க மறக்காதவர். மதசார்பற்ற கொள்கைக்காகவும், நாட்டின் ஒற்றுமைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்த அகமது இன்று நம்மிடம் இல்லை என்பதை மனது அறவே ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
தலைவர் கலைஞர் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் அகமதுவின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்திற்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதில் கூறப்பட்டுள்ளது.