நியாயப்படுத்த முயற்சிக்காதீர்கள் - தமிழக அரசை கண்டித்த இந்திய கம்யூனிஸ்ட்

மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு நியாயப்படுத்த முயற்சிப்பது சரி இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 12, 2022, 06:02 PM IST
  • தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு
  • கடந்த 10ஆம் தேதி அமலுக்கு வந்தது
  • கட்டண உயர்வை தமிழக அரசு நியாயப்படுத்தக்கூடாதென முத்தரசன் கருத்து
நியாயப்படுத்த முயற்சிக்காதீர்கள் - தமிழக அரசை கண்டித்த இந்திய கம்யூனிஸ்ட் title=

தமிழ்நாட்டில் ரூ 55 முதல் ரூ 1,130வரை மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக சமீபத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். மக்கள் இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து மக்களிடம் கருத்து கேட்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு கடந்த 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். அந்தவகையில் திமுகவின் கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மின் விநியோக கட்டணத்தை 32% முதல் 53% வரை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின் வாரியத்துக்கு ரூ. 59 ஆயிரம் கோடி வருமானம் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது மின் நுகர்வோர் தலையில் கடுமையான செலவுச் சுமை ஏற்றப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்கட்டணம் குறைவு என்பதால், மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்துமாறு தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது என்றும், கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதையும் காரணம் காட்டி கட்டண உயர்வை நியாயப்படுத்த முயற்சிப்பது சரியல்ல.

மேலும் படிக்க | ராமேஸ்வரத்தை சேர்ந்த ஆறு மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மின்சாரம் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் வாரியத்துக்கு ஏற்படுத்தும் பெரும் நஷ்டத்தை மூடிமறைப்பது ஏன்? என்ற வினாவுக்கும் ஏற்க தக்க விளக்கம் கிடைக்கவில்லை.

தற்போது, நடைமுறையில் உள்ள 100 யுனிட் இலவச மின்சாரமும், மானிய சலுகை கட்டண முறையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது எனினும், இந்தக் கட்டணச் சலுகையை விரும்பாதவர்கள், வாரியத்துக்கு தெரிவிக்கலாம் என்று கூறியிருப்பது மறைமுக நிர்பந்தம் மூலம் மானியங்களை பறிக்கும் செயலாகவே அமையும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மின்கட்டண உயர்வு தவிர நிலைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும், ஆண்டுக்கு 6 சதவிதம் மின்கட்டண உயர்வு செய்து கொள்ளவும் வழிவகை செய்திருப்பதை ஏற்க முடியாது.

மேலும் படிக்க | விளையாட்டு துறையிலும் தமிழகம் சாதிக்க வேண்டும் - முதலமைச்சர்

மத்திய அரசின் நவ தாராளமயக் கொள்கைகள், மக்கள் வாழ்க்கை தரத்தில் கடுமையான தாக்குதலை நடத்தி, சரித்து வீழ்த்தி வரும் சூழலில், தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை மிகக் கடுமையான அளவில் உயர்த்தியிருப்பது மக்களிடம் ஆத்திரத்தையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியுள்ளது. மின்கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மின்நுகர்வோர் கூறிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து, உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை நிறுத்தி வைத்து, நிலைக் கட்டணம் வசூலிப்பதையும், ஆண்டுக்கு 6% மின் கட்டண உயர்வு செய்யும் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். மின்கட்டணத்தை வெகுவாக குறைத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News