ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட பல இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட், போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறக் கூடிய ஒவ்வொரு பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழகம் மட்டுமின்றி பெங்களூருவில் உள்ள தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
எனது வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை. ஒரே ஒரு அதிகாரி மட்டும் காலை 8.30 மணிக்கு வந்தார். அப்போது நான் குளித்து கொண்டு இருந்தேன். அவரும் போய்விட்டார். காவல் அதிகாரிகள் எதற்கு வந்தார்கள் என்றே தெரியவில்லை.
நானும், சசிகலாவும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும், எங்களை மிரட்டிப்பார்க்கவுமே சோதனை நடக்கிறது. எதையும் சந்திக்கும் தைரியம் எங்களுக்கு உண்டு. ஜெ.ஜெ. தொலைக்காட்சியை முடக்கியது போல் ஜெயா தொலைக்காட்சியை முடக்கும் வேலை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.