இனி டெய்லி 12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா.. கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு! என்ன மேட்டர்?

New 12 Working Hours Bill: தொழிலாளர்களின் பணி நேரத்தை எட்டு மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தப்படுவது தொடர்பான  சட்ட மசோதா திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 21, 2023, 04:44 PM IST
  • காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, மமக, பாஜக, பாமக
  • திமுகவின் கூட்டணி கட்சிகள் மசோதாவை கண்டித்து இந்த ஆட்சியில் முதல் முறையாக வெளிநடப்பு.
  • இந்த மசோதா குறித்து அமைச்சர்கள் விளக்கம்.
இனி டெய்லி 12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா.. கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு! என்ன மேட்டர்? title=

New 12 Working Hours Bill: சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி, 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச் ) சட்ட முடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், மமக, விசிக, பாஜக, மதிமுக, பாமக உள்பட பெரும்பாலான எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

8 மணி நேரம் வேலை நீர்த்துப்போக செய்யும் மசோதா

அப்போது பேசிய பல்வேறு  கட்சிகளின் உறுப்பினர்கள், எட்டு மணி நேர வேலை என்பதை நீர்த்துப் போகச் செய்கிற 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் முன்வடிவை திரும்ப பெறுவதோடு, தேர்வு குழுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.  

இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய சிபிஎம் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி,"12 மணி நேரம் வேலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எட்டு மணி நேரம் வேலை என்பதை நீர்த்துப்போக செய்யும் சட்ட மசோதாவை எதிர்கிறோம்" என்றார். இதே போல, இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினார்.  மசோதாவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சிபிஐ உறுப்பினர் தளி இராமச்சந்திரன் வலியுறுத்தினார். 

நிறுவனங்களுக்கு மட்டும்தான் பயன்

காங்கிரஸ் சார்பாக பேசிய செல்வப் பெருந்தகை, "இந்த சட்ட மசோதா தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும், தொழிலாளர்கள் பயனடைய மாட்டார்கள்" என்று தெரிவித்தார். பாஜக சார்பாக பேசிய நயினார் நாகேந்திரன், இந்த மசோதாவை மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து பேசிய வேல்முருகன், தனியார் முதலாளிகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | கொடநாடு வழக்கு: சட்டப்பேரவையில் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்!

தேர்வு குழுவுக்கு அனுப்ப கோரிக்கை

தொழிலாளர்களின் உரிமை எல்லாம் பறிக்கின்ற இந்த சட்டம் முன் வடிவு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது, தமிழக அரசு இதனை திரும்ப பெற வேண்டும், தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார். தொழிற்சாலைகளை பாதுகாப்போடு, தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதால், இந்த சட்டத்தை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

அமைச்சர்கள் விளக்கம்

இதற்கு பதில் விளக்கம் அளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், "இந்த சட்டத்தால் எல்லோருக்கும் பாதிப்பு இல்லை. தற்போது உள்ள நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும். வாரத்திற்கு வேலை நாட்களான 48 மணி நேரத்தை நான்கு நாட்களில் முடித்த பிறகு மூன்று நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். விடுமுறை நாட்களில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த சட்ட திருத்தமானது அனைவருக்கும் கொண்டுவரப்படவில்லை. விருப்பப்படும் தொழிலாளர்களுக்கு ஆய்வு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்றார்.

ஒன்றிய அரசுடையது...

தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிற்சாலைகள் சட்டம் என்பது ஒன்றிய அரசு கொண்டு வருவதால் தமிழ்நாடு அரசு கொண்டுவரவில்லை. 12 மணி நேரம் வேலை என்பது யார் வேண்டுமோ அவர்கள்தான் இதை பயன்படுத்தலாம், எல்லோருக்கும் அல்ல. அவர்கள் தன்னார்வத்தின் அடிப்படையில் செய்கிறோம் என்று தெரிவித்து வேலை செய்து வார விடுப்பு 3 நாட்கள் எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தால் மட்டுமே 12 மணி நேர வேலை அனுமதிக்கப்படும்" என்றார்.  

முதல் முறையாக வெளிநடப்பு

அதிமுக பேரவையில் இல்லாத நிலையிலும், திமுக தவிர மீதமுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். திமுக ஆட்சியமைந்த பிறகு கூட்டணிக் கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது இதுவே முதன்முறையாகும்.

மேலும் படிக்க | ஆருத்ரா நிதி மோசடி விவகாரம் - முதலமைச்சர் முக.ஸ்டாலின் விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News