தமிழக மாணவர்களின் வாய்ப்புகளை அபகரிக்க கூடாது -இராமதாசு!

தமிழக பல்கலைக்கழகங்களை பிற மாநில மாணவர்கள் அபகரிக்க அனுமதிக்க கூடாது என பாமக நிறுவன் இராமதாசு தெரிவித்துள்ளார்!

Last Updated : Sep 7, 2019, 10:40 AM IST
தமிழக மாணவர்களின் வாய்ப்புகளை அபகரிக்க கூடாது -இராமதாசு! title=

தமிழக பல்கலைக்கழகங்களை பிற மாநில மாணவர்கள் அபகரிக்க அனுமதிக்க கூடாது என பாமக நிறுவன் இராமதாசு தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.,  "தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி தேவைக்காக தொடங்கப்பட்ட அரசு பல்கலைக்கழகங்கள், அந்த நோக்கத்தை மறந்து விட்டு, பிற மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளன. வரி செலுத்தும் மக்களின் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பறித்து அண்டை மாநில  மாணவர்களுக்கு தாரை வார்க்கும் பல்கலைக்கழக நிர்வாகங்களின் செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழகத்தின் 3 மூத்த பல்கலைக்கழகங்களான சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அண்மைக்காலமாக பிற மாநில மாணவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கேரள மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் தவிர பிகார், ஜார்க்கண்ட்  ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகின்றனர். முதுநிலை பட்டப்படிப்பு மட்டுமின்றி, எம்.பில்., பி.எச்டி ஆகிய படிப்புகளிலும் தமிழக மாணவர்களை விட பிற மாநில மாணவர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் தமிழக மாணவர்களுக்கு புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதுடன், வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு வளாகங்களில் பயிலும் பிற மாநில மாணவர்கள் தங்களுக்குள்  அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் மொழி மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளை திணிக்க  முயல்கின்றனர். இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தி விடும் ஆபத்து உள்ளது. மதுரை காமராசர், கோவை பாரதியார் பல்கலைக்கழகங்களிலும் பிற மாநில மாணவர்கள் தான், குறிப்பாக  கேரள மாணவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்படுகின்றனர். அந்த பல்கலைக்கழகங்களில் மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பு போன்ற செயல்கள் அரங்கேறவில்லை என்றாலும் கூட மாணவர்களிடையே மாநில அடிப்படையில் பிரிவினை நிலவி வருகிறது. இதுவும் காலப்போக்கில் மாணவர்களிடையே மோதலை  உருவாக்கக்கூடும். இதையெல்லாம் உணர்ந்தும் உயர்கல்வியில் பிற மாநில மாணவர்களை அதிக அளவில் சேர்க்க  பல்கலைக்கழக நிர்வாகங்கள் முன்னுரிமை அளிப்பது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

கல்வி தான் மாணவர்களையும், சமூகங்களையும் உயர்த்தும் என்பதால் அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் பிற மாநில மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு வழங்குவதை தடுக்க முடியாது. அவ்வாறு தடுப்பதும் நியாயமில்லை. ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மீதமுள்ள இடங்கள் மட்டும் தான் பிற மாநிலத்தவருக்கு வழங்கப்பட வேண்டும். மாறாக, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தகுதியின்படி கிடைக்க வேண்டிய இடங்கள், எந்த காரணமும் இல்லாமல் பிற மாநிலத்தவர்களுக்கு ஒதுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகவே அமையும்.

உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் முதலிடத்தில் இருப்பது தமிழகம் ஆகும். இந்த பெருமைக்கு  காரணம் தமிழகத்தில் அரசு பல்கலைக்கழகங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் இருப்பது தான். அதிலும் குறிப்பாக அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி வழங்கப்படுவதால் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் எளிதாக உயர்கல்வி கற்க முடிகிறது. அவ்வாறு இருக்கும் போது தமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழர்களை புறக்கணித்து விட்டு, பிற மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது சமூக நீதியாக இருக்காது.
இந்தியாவின் எந்த மாநில அரசு பல்கலைக்கழகங்களிலும் பிற மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் திருவாரூரிலும், அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் செயல்படும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. ஆனால், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட தமிழக பல்கலைக்கழகங்களில் மட்டும் பிற மாநில மாணவர்களை திணிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நிர்வாகங்கள் சிந்திக்க வேண்டும்.
 
இனி வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை முறையை வெளிப்படைத் தன்மை நிறைந்ததாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News