பெட்ரோல் - டீசல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டு வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் கவனம் செலுத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதுக்குரித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
மத்திய பா.ஜ.க. ஆட்சியில், மக்களின் நலனைப் பின்னுக்குத் தள்ளி - எண்ணெய் நிறுவனங்களின் அபரிமிதமான இலாப நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, பெட்ரோல் - டீசல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டு, லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை வேகமாக நெருங்கி வருவது, மிகுந்த கவலையளிப்பதாகவும், வேதனையளிப்பதாகவும் இருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்த போதும், அதன் பலனை அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கோ, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கோ, அத்தியாவசியப் பொருள்கள் போக்குவரத்துக்கோ போய்ச் சேர்ந்து விடாமல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த அனுமதிப்பதில் மட்டுமே, பா.ஜ.க. அரசு கடந்த நான்கு வருடமாக அடாவடியாகக் குறியாக இருந்து செயல்பட்டு வருவதால், இன்றைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாய் 62 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் 75 ரூபாய் 48 காசுகளும் விற்கும் அபாயகரமான எல்லைக்குப் போய் விட்டது.
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்த போதெல்லாம் அடுத்தடுத்து “கலால் வரி” விதித்து வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தீவிரமாக கவனம் செலுத்தியதே தவிர, மக்களின் வருவாய் - வாங்கும் சக்தி ஆகியவற்றைப் பற்றி,எவ்வித அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை.
பா.ஜ.க.விற்குச் சாதகமான மாநிலங்களில் தேர்தல் வந்தால், பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் எண்ணெய் நிறுவனங்கள், தேர்தல் முடிந்ததும் மீண்டும் எவ்விதத் தடையுமின்றி தாராளமாக விஷம் போல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவோ குறைக்கவோ, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்தவோ, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வேதனைத் தீயில் வெந்து கருகிக் கொண்டிருக்கும் இந்திய மக்களை வீதியில் நின்று போராடும் நிலைக்கு இறக்கியிருப்பது,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குரிய அடிப்படை இலக்கணமாக அறவே இல்லை.
ஆகவே பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சார்பில், செப்டம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய “பாரத் பந்திற்கு” , திராவிட முன்னேற்றக் கழகம் மனப்பூர்வமான ஆதரவினை நல்கி, அந்த பந்த் முழுஅளவில் வெற்றி பெற ஆர்வத்துடன் பங்கேற்று, அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
பந்த் நடைபெறும் தேதியில் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறு குறு வணிகர்கள், பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்குத் தக்க பாடம் புகட்டிட முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.