தமிழகம் முழுவதும் 300 குழுக்கள் அமைக்கப்பட்டு கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின் போது, அரிசிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
கடந்த 7ம் தேதி நடந்த சோதனையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டார். மேலும், உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைத்து உடனடியாக கடைகளில் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் 300க்கும் மேற்பட்ட குழுக்கள் அனைத்து அரிசி வியாபார கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
அந்த ஆய்வின் முடிவில்தான் பிளாஸ்டிக் அரிசியா, இல்லையா என்று தெரியவரும். புகாரின் பேரிலோ தகவலின் அடிப்படையிலோ தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி கூறியது:-
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்திருக்கிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது. சோதனையின்போது, கடைகளில் பிளாஸ்டிக் அரிசியாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டதால் அதை மாதிரியாக எடுத்து, தமிழகம் முழுவதும் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடங்களில் ஏதாவது ஒன்றிற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளோம்.
அதேபோன்று, சென்னையில் நடந்த சோதனையில் 14 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளின் ஆய்வு முடிவு 24 மணி நேரத்திற்குள் தெரியும். தமிழகத்தில் இதுவரை நடந்த சோதனையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை ஆகிறதா என்பது உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பிளாஸ்டிக் அரிசி குறித்து அரசு எச்சரிக்கை:-
தமிழகத்தில் நடந்த சோதனையில் பிளாஸ்டிக் அரிசி இல்லை என தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் அரிசி பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி இல்லை.
சிலர் பிளாஸ்டிக் அரிசி நடமாட்டம் உள்ளதாக வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இருந்தாலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள். இதுவரை நடைபெற்ற சோதனையில் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
யாராவது பிளாஸ்டிக் அரிசி விற்பதாக தகவல் கிடைத்தால், அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு இந்த விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்று கூறினார்.