தமிழக அரசை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்... எதற்கு தெரியுமா?

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை பாராட்டியிருக்கிறார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 28, 2022, 12:26 PM IST
  • ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம்
  • அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென கோரிக்கை
தமிழக அரசை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்... எதற்கு தெரியுமா? title=

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து அப்பாவிகள் தற்கொலை செய்து கொள்வதையும், அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதையும் தடுக்கும் நோக்குடனான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது ஆகும்.

தமிழகம் கடந்த சில ஆண்டுகளில் சந்தித்த மிகப்பெரிய சாபக்கேடுகளில் முதன்மையானது ஆன்லைன் சூதாட்டம். உலக அளவில், குறிப்பாக இங்கிலாந்தில் 2009ம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின் 2014ம் ஆண்டில் அவை இந்தியாவுக்குள் நுழைந்தன. 2020ம் ஆண்டில் கரோனா ஊரடங்கு காலத்தில் தான் லட்சக்கணக்கானோர் இந்த தீமைக்கு அடிமையாயினர். 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு நவம்பர் வரை 60-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதையும், 2021ம் ஆண்டு பிப்ரவரியில் முறைப்படியான சட்டம் இயற்றப்பட்டதையும் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வந்தன. 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது வரையிலான 10 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒருவர் கூட உயிரிழக்க வில்லை. ஆனால், அதற்கு பிந்தைய 10 மாதங்களில் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாமக-வின் அழுத்தங்கள் காரணமாகத் தான் முந்தைய அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டில் அவசர சட்டமும், 2021ம் ஆண்டில் சட்டமும் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகும் கூட திருத்தப்பட்ட புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தான் வலியுறுத்தி வந்தது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கடந்த 10ம் தேதி எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும், அது குறித்து அரசுக்கு இரு வாரங்களில் பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்படுவதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் படிக்க | பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு அதிர்ச்சி செய்தி

அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தான் இப்போது அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக என்னென்ன காரணங்களை பாமக முன்வைத்ததோ, அவை அனைத்தும் அவசர சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. ஆன்லைன் சூதாட்டங்கள் திறன் சார்ந்தவை அல்ல.... அவை திறனை வளர்க்கவில்லை; ஆன்லைன் சூதாட்டங்கள் அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலானவை; ஆன்லைன் சூதாட்டங்களால் உடல் நலன் பாதிக்கப்படுகிறது; ஆன்லைன் சூதாட்டங்களை முறைப்படுத்த இயலாது என்பதால் அவற்றை தடை செய்வது தான் தீர்வு என்று அவசர சட்டத்தில் கூறப்பட்டிருப்பதாக அறிகிறேன்.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக பாமக மேற்கொண்ட முன்னெடுப்புகளால், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் இரண்டாவது முறையாக தடை செய்யப்படவுள்ளது. ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யும் ஒரு கட்சிக்கு இதை விட பெரிய மகிழ்ச்சியும், பெருமையும், பெருமிதமும் இருக்க முடியாது. அடுத்த இரு நாட்களுக்குள் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் எவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்க மாட்டார்கள்; ஆன்லைன் சூதாட்டத்தால் எவரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்; எந்த குடும்பமும் நடுத்தெருவுக்கு வராது என்பதை விட தமிழக மக்களுக்கு ஓர் அரசியல் கட்சியால் என்ன நன்மை செய்து விட முடியும்?

அடுத்த கட்டமாக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அவசர சட்டத்தை இன்றைக்குள் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்; அவரது ஒப்புதலை உடனடியாக பெற்று அரசிதழில் வெளியிட வேண்டும். பாமக-வின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கடந்த மே 31ம் தேதி தமிழக ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்துப் பேசிய நான், ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்தும், அதனால் நிகழும் தற்கொலைகள் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறினேன். ஆன்லைன் சூதாட்டங்களால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து ஆளுனரும் கவலை தெரிவித்தார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம்

எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழகத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டிய சமூகத்தீமைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அவற்றையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காக போராட்டங்களை பாமக முன்னெடுக்கும்; வெற்றி பெறும் என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News