மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் தமிழக அரசு -PMK காட்டம்!

அரசு வேலைவாய்ப்பு குறித்த கனவுகளுடன் பட்ட மேற்படிப்பு படித்த மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு சிதைப்பது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Updated: Dec 18, 2018, 12:32 PM IST
மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் தமிழக அரசு -PMK காட்டம்!

அரசு வேலைவாய்ப்பு குறித்த கனவுகளுடன் பட்ட மேற்படிப்பு படித்த மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு சிதைப்பது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது....

"தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும்  33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்கு தகுதியற்றவை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பு குறித்த கனவுகளுடன் லட்சக் கணக்கில் செலவழித்து பட்ட மேற்படிப்பு படித்த மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்.காம் உள்ளிட்ட படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றுக்கு மாணவர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. அதேநேரத்தில் இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் மிகக்குறைவாக இருப்பதாலும், அவற்றை அதிகரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாலும் அவற்றுக்கு இணையாக 33 புதிய பட்டமேற்படிப்புகள் தொடங்கப்பட்டன. எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்.காம் ஆகிய படிப்புகளை தகுதியாகக் கொண்ட அனைத்து பணிகள் மற்றும் உயர்படிப்புகளில் இந்த இணை படிப்புகளை படித்த மாணவர்களும் சேரலாம் என்று பல்கலைக்கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், இப்போது 33 புதிய பட்ட மேற்படிப்புகளும் அரசு பணிக்கு தகுதியற்றவை தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும், அவற்றிற்குட்பட்ட கல்லூரிகளிலும் கற்பிக்கப்படும் எம்.சி.ஏ படிப்பு உள்ளிட்ட 13 வகையான முதுநிலை அறிவியல் படிப்புகள் எம்.எஸ்சி கணினி அறிவியல் படிப்புக்கு இணையானவை அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெரியார் பல்கலைக்கழகத்திலும், பாரதியார் பல்கலைக்கழகத்திலும் கற்பிக்கப்படும் எம்.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், எம்.காம் கணினி பயன்பாடு உள்ளிட்ட 20 படிப்புகள் எம்.காம் படிப்புக்கு இணையற்றவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு படிப்புக்கு இணையான இன்னொரு படிப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றால், மூலப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் 70% புதிய படிப்புக்கான பாடத்திட்டத்திலும் இடம் பெற வேண்டும் என்பது விதியாகும். ஆனால், புதிய பாடத்திட்டம் அத்தகையதாக இல்லை என்பதால் புதிதாக தொடங்கப்பட்ட படிப்புகள் மூலப் படிப்புக்கு இணையற்றவை என்று அதற்காக அமைக்கப்பட்ட  சமானக் குழுவின் 59&ஆவது கூட்டத்தில் முடிவெடுத்து, அதனடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை அபத்தமானது. பல்கலைக்கழகங்கள் செய்த தவற்றுக்காக அவற்றில் படித்த மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 33 வகையான புதியப் படிப்புகளுக்கு பாடத்திட்டத்தை வகுத்தது பல்கலைக்கழகங்கள் தான். இதற்காகவே, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டக் குழுக்கள் உள்ளன. அவை வகுத்துக் கொடுக்கும் பாடத்திட்டத்தை கல்வி நிலைக்குழுக்கள் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பிறகு தான் புதியப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்  படும். பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுவும், கல்வி நிலைக்குழுவும் தான் புதிய படிப்புக்கான பாடத்திட்டம் உரிய வகையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும். அக்குழுக்கள் தங்கள் பணியை சரியாக செய்யாததன் விளைவு தான் 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்கான தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்கலைக்கழகங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்திய படிப்புகளில் சேர்ந்ததைத் தவிர வேறு எந்தத் தவறையும் மாணவர்கள் செய்யவில்லை. அரசு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் அப்படிப்புகளை வழங்கும் போது அவற்றில் மாணவர்கள் சேருவது இயல்பான ஒன்று தான். இந்தப் படிப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 25,000 மாணவர்கள் சேருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் இப்படிப்புகளை படித்து பட்டம் பெற்றிருப்பார்கள். இத்தகைய சூழலில் இந்த படிப்புகள் அரசு பணிக்கு தகுதியற்றவை என்று அறிவித்திருப்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இப்படிப்புகள் அரசு பணிக்கு தகுதியற்றவை என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அதையே காரணம் காட்டி தனியார் நிறுவனங்களும் இப்படிப்பு முடித்தவர்களை நிராகரிக்கக் கூடும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

எனவே, 2018&19 ஆம் கல்வியாண்டு வரை இப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பெற்ற பட்டங்கள் எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்.காம் ஆகியவற்றுக்கு இணையானவை;அரசு வேலைக்கு  தகுதியானவை என்று அறிவிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இப்படிப்புகளை தடை செய்ய வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.