சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிரந்தர தீர்வு காணும் வரை போரட்டம் தொடரும் என்று போராட்டக்குழு தெரிவித்துள்ளது.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது இதனால் மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெற வில்லை. ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் ஆவேசம் அடைந்து போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நேற்று முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், சென்னை திரும்பாமல் டெல்லியில் இருந்த படியே சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று கூறியிருந்தார். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிடுமாறு ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.
ஆனால், முதல் அமைச்சர் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட போராட்ட குழு மறுப்பு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை முழுவதுமாக நீங்கும் வரை போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.