சவுதியில் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ரஜினி நடித்துள்ள காலா படம் பெற்றுள்ளது!!
கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மேலும், காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. உலகம் முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியானது.
இந்நிலையில், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடாக உள்ள சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியேட்டர்கள் இருந்தன. ஆனால், நாளடைவில் இது இஸ்லாமிய மரபுகளுக்கு எதிரானது என்று, இஸ்லாமிய மறுமலர்ச்சித் திட்டம் 1980-களில் தியேட்டர்களுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.
இதனால், அங்குள்ள அனைத்துத் தியேட்டர்களும் மூடப்பட்டன. ஆனால், தற்போது புதிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான், தான் பதவியேற்ற பிறகு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி சவுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதன் படி பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி, பெண்களுக்கான பல்வேறு சலுகைகள் போன்ற பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
அதன் படி இத்தனை ஆண்டுகளாகத் திரைப்படங்களே வெளியிடப்படாமல் இருந்த நாட்டில் முதல் முறையாக `பிளாக் பாந்தர்’ (Black Panther) படம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தற்போது சவுதியில் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ரஜினி நடித்துள்ள காலா படம் பெற்றுள்ளது.
இந்த செய்தியைக் காலா படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபில்ம்ஸ் (Wunderbar Films) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
This is HUGE! #Kaala is the FIRST ever Indian film to be released in the Kingdom of Saudi Arabia! @rajinikanth @beemji @dhanushkraja @vinod_offl @LycaProductions pic.twitter.com/JATiaVejTS
— Wunderbar Films (@wunderbarfilms) June 7, 2018