முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவுசெய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூட்டப்பட்டு, ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தை ஆளுநருக்குப் பரிந்துரை செய்து தமிழக அரசு அனுப்பியது. இதையடுத்து, தமிழக அரசு பரிந்துரை வழங்கியும் ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காவிலை என்ற குற்றச்சாற்று எழுந்தது. இதற்கு பதிலளித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. அதில், 7 பேரின் விடுதலை குறித்து அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, நியாயமாக முடிவு எடுக்கப்படும் எனவும், தமிழக அரசிடமிருந்து ஏராளமான ஆவணங்கள் பெறப்பட்டன. ஆவணங்கள் அனைத்தும் கவனமாகவும், நுட்பமாகவும் ஆய்வு செய்யப்பட்டு, அரசமைப்புச் சட்டத்திற்கு இணக்கமாக, நேர்மையாகவும் நியாயமாகவும் முடிவு எடுக்கப்படும் எனவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.
மேலும் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக அப்பாஸ் உள்ளிட்ட ராஜீவ்காந்தி கொலையின்போது பலியானோரின் குடும்பத்தினர் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், அப்பாஸின் மனு காலாவதியாகி உள்ளது எனக் கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தாக்கல் ஏழு பேரின் விடுதலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனையடுத்து, ஏழு பேரின் விடுதலைக் குறித்து விரைவில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என தெரிகிறது. விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.