சென்னை: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.
அதன்படி, அதிமுக மற்றும் திமுகவுக்கு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையின் படி இரு கட்சிகளும் 3 பேரை தேர்ந்தெடுக்க முடியும். இதன் அடிப்படையில் திமுக கூட்டணி சார்பில் வில்சன், சண்முகம், வைகோ மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் அன்புமணி, முஹம்மத் ஜான், சந்திரசேகரன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் திமுக சார்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். நேற்று முன்தினம் வேட்புமனு பரீசீலனையின் போது வைகோவின் மனு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது வேட்புமனுவை என்.ஆர்.இளங்கோ திரும்பப் பெற்றார். இதனையடுத்து தற்போது 6 பேரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்த வில்சன், சண்முகம், வைகோ, அன்புமணி, முஹம்மத் ஜான், சந்திரசேகரன் என ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள் என பேரவைச் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களுக்கும் சான்றிதழையும் வழங்கினார்.
மாநிலங்களவை காலியிடமும், அந்த இடத்திற்கு தாக்கல் செய்த வேட்புமனுக்களின் எண்ணிக்கையும் சரியாக இருந்ததால் ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.