சென்னை: தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது மாவட்டங்கள் பிரிப்பால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் வார்டு மறுவரையறை பணிகள் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனையடுத்து 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது.
2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்:
தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டநிலையில், 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனையும், வேட்புமனுக்களை திரும்ப பெற செப்டம்பர் 25 ஆம் தேதி கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9 ஆம் தேதியும், பதிவான வாக்குகள் அக்டோபர் 12 ஆம் தேதி எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் விறுவிறு:
இதனையடுத்து அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
செப்டம்பர் 22 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் நிலையில் ஒன்றிய, மாவட்ட குழு உறுப்பினர் பதவி, ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு செப்டம்பர் 17 ஆம் தேதி வரை 13,182 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ALSO READ | தொடரும் உள்ளாட்சி பதவிக்கான ஏலம்! நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?
கூட்டணியில் பிளவு:
ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு வழங்கலாம் எனவும் பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
அதிமுக- பாமக கருத்து மோதல்:
இந்நிலையில் தனித்துப்போட்டியிட்டால் பாமகவுக்குதான் இழப்பு எனவும், அதிமுகவை விமர்சிப்பதை ஏற்கமுடியாது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
ALSO READ | AIADMK vs PMK பிரேக் அப்! ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு, 'தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்வதாகவும், கட்சி நிர்வாகிகளின் விருப்பத்திற்காகவே உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டியிடுவதாகவும், இது தற்காலிக முடிவும் என்று விளக்கம் அளித்தார்.
தனித்துப்போட்டி:
இதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிகவும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ளன
திமுக கூட்டணியின் நிலைப்பாடு என்ன?
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளிடம் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
ALSO READ | தனித்து களம் காணும் கட்சிகள்: சிதறும் வாக்கு வங்கி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR