Salem Tamil Nadu Lok Sabha Election Result 2024: தேசிய அளவில் ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் முட்டிமோதி வருகிறது. தமிழகத்திலும் இந்த கூட்டணியோடு தனியாக அதிமுக கூட்டணியும் களத்தில் நிற்கிறது. மும்முனை போட்டியில் நிலவும் தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டில் முக்கிய ஒரு தொகுதியாக சேலம் திகழ்கிறது. கொங்கு மண்டலம் எப்போதுமே திமுகவுக்கு சற்று பிரச்னைக்குரியதுதான். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் வேறு... கடந்த தேர்தலில் ஆட்சியின் மீதான வெறுப்பு மனநிலையால் அதிமுக சேலத்தில் தோற்றாலும் இம்முறை மிகுந்த நம்பிக்கை உடன் களம் கண்டிருக்கிறது. பாஜக கூட்டணியில் இந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் தொகுதி குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
சேலம் மக்களவை தொகுதி - முழு பார்வை
தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில் 15ஆவது தொகுதிதான் சேலம். சேலம் மக்களவை தொகுதியில் மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர். அதில் மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 336 பேர் ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 25 ஆயிரத்து 354 பேர் பெண் வாக்காளர்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர்கள் 221 பேர் உள்ளனர்.
மேலும் படிக்க | மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: ECI இணையதளத்தில் காண்பது எப்படி?
சேலம் மக்களவை தொகுதியில் மொத்தம் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகள் சேலம் மக்களவை தொகுதியில் அடங்கியிருக்கிறது.
2019 மக்களவை தேர்தல் - ஒரு பார்வை
திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் முதலிடத்தை பிடித்தார். அவர் 6 லட்சத்து 6 ஆயிரத்து 302 வாக்குகளை பெற்றார். தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் 4 லட்சத்து 59 ஆயிரத்து 376 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். மூன்றாம் இடத்தை மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பிரபு மணிகண்டன் பிடித்தார். அவர் 58 ஆயிரத்து 662 வாக்குகளை பெற்றிருந்தார்.
சேலம் மக்களவை தொகுதியில் வென்றவர்கள் விவரம்
1952, 1957, 1962 ஆகிய மூன்று தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பாக எஸ்.வி. ராமசாமி வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1967இல் திமுக வேட்பாளர் க.ராசாராம் மற்றும் 1971இல் திமுக வேட்பாளர் இ.ஆர். கிருட்டிணன் ஆகியோர் வென்றனர். அதிமுக முதல்முறையாக போட்டியிட்டு 1977ஆம் ஆண்டு சேலத்தை கைப்பற்றியது. அப்போது பி. கண்ணன் எம்.பி.,யாக தேர்வானார். 1980இல் திமுக வேட்பாளர் சி. பழனியப்பன் வென்றார்.
1984,1989, 1991 ஆகிய மூன்று தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியில் ரங்கராஜன் குமாரமங்கலம் வெற்றி பெற்றார். அடுத்து தாமாக சார்பாக ஆர். தேவதாஸ் போட்டியிட்டு 1996இல் வெற்றிபெற்றார். அதன்பின் 1988இல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தி, சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.
1999ஆம் ஆண்டு அதிமுக சார்பில் செல்வகணபதி, 2004இல் காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, 2009இல் அதிமுக சார்பில் செம்மலை, 2014இல் அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் ஆகியோர் சமீப காலங்களில் சேலத்தில் வென்றனர். சுமார் 39 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்தமுறைதான் திமுக சேலத்தில் வெற்றி பெற்றது. அவரும் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றார். அதுவும் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் தொகுதியையே திமுக கைப்பற்றி அசத்தியிருந்தது.
சேலம் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் விவரம்
இந்த முறை திமுக எஸ்.ஆர். பார்த்திபனுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அவருக்கு பதிலாக திமுக சார்பில் டி.எம். செல்வகணபதி போட்டியிட்டார். இவர் 1999ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சேலத்தில் போட்டியிட்டு வென்றவர் ஆவார். இருப்பினும், சில ஆண்டுகளுக்கு திமுக மாறினார். தற்போது 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேலத்தில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிட்டார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிட்டார். நாம் தமிழர் சார்பில் மருத்துவர் மனோஜ்குமார் போட்டியிட்டார்.
பகுஜன் சமாஜ் சார்பில் முரளி, அம்பேத்கரைட் பார்டி ஆப் இந்தியா சார்பில் அம்பேத்கர், அறவோர் முன்னேற்றக் கழகம் சார்பில் சுதர்சனம், உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் மாணிக்கம், தேசிய மக்கள் கழகம் சார்பில் ராமசந்திரன் என 9 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் 16 சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 25 பேர் சேலத்தில் இம்முறை போட்டியிட்டனர். '
சேலம் மக்களவை தொகுதி பதிவான வாக்குகள்
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் 78.16% வாக்குகள் பதிவாகின. அதாவது மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரத்து 481 வாக்குகள் பதிவாகின.
சேலம் மக்களவை தொகுதியில் வெற்றி யாருக்கு?
கடந்த முறை போலவே இம்முறையும் திமுகவே சேலம் தொகுதியை கைப்பற்றும் என கூறப்படுகிறது. செல்வகணபதியும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், அதிமுக இரண்டாம் இடத்தையும், பாஜக மூன்றாம் இடத்தையும் பிடிக்கும் என தேர்தல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ