சயனைடு மல்லிகா பக்கத்து அறையில் இருந்ததை அடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு வேறு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய சசிகலா குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இவர் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு பக்கத்து அறையில் சயனைடு மல்லிகா எனும் ஆயுள் தண்டனை கைதி அடைக்கப்பட்டு இருக்கிறார்.
சயனைடு மல்லிகா எனும் குற்றவாளி கோவிலுக்கு வரும் பெண்களை தங்க நகைகளுக்காக சயனைடு கொடுத்து கொலை செய்ததால் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இது குறித்து விவரம் அறிந்த சசிகலா சிறைத்துறை அதிகாரியிடம் வேறு அறை மாற்றித்தரும் படி முறையிட்டுள்ளார். இதனையடுத்து சசிகலாவுக்கு வேறு ஒரு பகுதியில் பாதுகாப்பான சிறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.