முதல்வராக நினைப்பவர்கள் நித்யானந்தாபோல் தனித்தீவு வாங்கி, முதலமைச்சர் ஆகலாம் என மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்!!
சென்னை: மூதறிஞர் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்.... குடியுரிமை சட்டம் எந்த விதத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு இல்லை. இதுகுறித்து நேற்றே அதிமுக கூறியுள்ளது. எனவே எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்த்து, ஆதரிக்க வேண்டிய விஷயங்களை அதிமுக ஆதரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
ஒரு குழப்பமான கட்சி திமுக, நீதிமன்றம் சென்று தேர்தலை நிறுத்த முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதனை ஏற்பதாக கூறிய ஸ்டாலின், தற்போது நீதிமன்றம் சென்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலை வரவேற்றப்பதாகவும், அதே நேரத்தில் நீதிமன்றம் சென்று மக்களை ஏமாற்றும் வேலையை ஸ்டாலின் செய்து வருகிறார் என குற்றம் சாட்டினார். மேலும், முதல்வர் கனவோடு தான் ஸ்டாலின் உள்ளார். எனவே அவர் நித்தியானந்தா போன்று ஒரு தீவை வாங்கி அங்கு வேண்டுமானால் முதல்வராக ஸ்டாலின் ஆகலாம். தமிழகத்தில் ஒரு போதும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
குருமூர்த்தி விமர்சனத்திற்கு, எதிர் விமர்சனம் அதிமுக தான் செய்து வருகிறது. அதிமுகவை விமர்சனம் செய்தால் தான் பெரிய ஆள் ஆக முடியும் என்று குருமூர்த்தி பேசி வருகிறார். எனவே அவர் அரசியலில் கத்துக்குட்டி, சர்ச்சையை உருவாக்கி விளம்பரம் தேட வேண்டும் என்று பேசி வருகிறார் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார். இதயடுத்து தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்..... உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக அதிமுக பின்பற்றி வருகிறது. தோல்வி பயம் காரணமாக ஏதேனும் செய்து தேர்தலை நிறுத்த முடியுமா என்று பார்த்து வருகின்றனர் திமுகவினர் என்றும் அவர் தெரிவித்தார்.