போதி தர்மர் சிலையை சுற்றுலா மையமாக மாற்ற மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..!
இதுகுயர்த்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; இந்தியா - சீனா இடையிலான இருதரப்பு உறவுகளையும், சுற்றுலாவையும் மேம்படுத்தும் நோக்குடன் காஞ்சிபுரத்தில் போதி தர்மருக்கு பிரமாண்ட சிலை அமைக்கவும், புத்த மதத்துடன் தொடர்புடைய தமிழக நகரங்களை இணைத்து சுற்றுலா வளையம் அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.
புதிய வாய்ப்புகள் உருவாகும் போது அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது தான் அறிவார்ந்த அரசுக்கு அடையாளம் ஆகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங் அவர்களுக்கும் இடையே கடந்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுக்களின் போது, இந்தியா - சீனா இடையிலான பொருளாதார மற்றும் சுற்றுலா உறவுகளை வலுப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அதன் ஒருகட்டமாகவே போதி தர்மரின் பெருமைகளை மையமாக வைத்து தமிழ்நாட்டில் சுற்றுலா வளையம் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய அளவில் சிலை வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் வல்லபாய் படேலுக்கு 597 அடி உயரத்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை விட சற்று குறைந்த உயரத்தில் போதி தர்மரின் சிலை அமைக்கப்படும்; அங்கு போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ஒலி ஒளி காட்சிகள் ஏற்பாடு செய்யப்படும்; காஞ்சிபுரத்தில் தொடங்கி மாமல்லபுரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட புத்த மதத்துடன் தொடர்புடைய 6 நகரங்களை இணைக்கும் வகையில் வட்டச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்ய தமிழக அரசின் சுற்றுலாத் துறை திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை இரு வகைகளில் பயனளிப்பதாக அமையும். முதலாவதாக, சீன மக்களால் வணங்கப்படும் போதி தர்மரை மையமாக வைத்து சுற்றுலா மையம் அமைக்கப்படுவதால், அது சீன மக்களையும், சீன அரசையும் பெரிதும் கவரும். அதனால், இரு தரப்பு சுற்றுலாவும், வணிகமும் அதிகரிப்பது மட்டுமின்றி, இரு தரப்பு உறவும் வலுவடையும். இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள போதிலும், அதன் லட்சியங்களை எட்டுவதற்கு சீனாவின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேவை ஆகும். ஆனால், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் யாருக்கு வலிமை அதிகம் என்பது குறித்த போட்டியில் இந்தியாவும், சீனாவும் ஒன்றையொன்று நம்பிக்கையின்றி அணுகுவதால், இரு தரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அனைத்தையும் போதி தர்மர் சுற்றுலா மூலமான நடவடிக்கைகள் தகர்க்கும். அந்த வகையில் இது பயனுள்ளதாகும்.
இரண்டாவதாக போதி தர்மரின் பெருமையை தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பரப்ப கடந்த காலங்களில் தமிழக ஆட்சியாளர்கள் எதையும் செய்யவில்லை. சீனாவிலிருந்து இந்தியா வந்த யுவான்-சுவாங்கின் வரலாற்றை பாடநூல்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்த அளவுக்குக் கூட, நமது மண்ணின் மைந்தனான போதி தர்மரின் வரலாறு நமது மக்களுக்கும், மாணவர்களுக்கும் புகட்டப் படவில்லை. பல்லவ நாட்டை ஆண்ட கந்தவர்மனின் மூன்றாவது மகனாக பிறந்த போதி தர்மர், தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து புத்த துறவியாக மாறினார். பின்னர் சீனாவுக்கு சென்று புத்த மதத்தை பரப்பியதுடன், குங்பூ கலையையும் கற்பித்தார். சீனாவில் மட்டுமின்றி, தாய்லாந்து, ஜப்பான், ஹங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் போதி தர்மர் வணங்கப்படுகிறார். ஆனால், அவரைப் பற்றிய உண்மைகள் இதுவரை மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. இப்போது போதி தர்மரின் மிகப் பிரமாண்ட சிலை அமைக்கப்படுவதன் மூலமும், அவரது வாழ்க்கை வரலாறு பரப்பப்படுவதன் மூலமும் பல்லவ வம்சத்து இளவரசரான போதி தர்மரின் புகழ் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரவும்.
இந்திய& சீன உறவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த அதிக நிதி தேவை. இத்திட்டத்தை தமிழக அரசால் மட்டும் செயல்படுத்த முடியாது. எனவே, போதி தர்மர் சிலை அமைத்தல் மற்றும் புத்த மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைத்து சுற்றுலா வளையம் அமைக்கும் திட்டத்திற்கு தேவையான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், சீனாவின் ஃபியூஜியான் மாநிலத்திற்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்துவது என்று மாமல்லபுரத்தில் இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடங்க வேண்டும்.