முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலவர் பன்னீர் செல்வம் ஆகியோர் மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!!
மகா விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த திருநாள் கிருஷ்ண ஜெயந்தியாக இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உலகில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகி, மக்கள் அனைவரும் எல்லா நலன்களோடும், வளங்களோடும் வாழ்ந்திட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதே போல அதிமுக தலைமைக் கழகம் சார்பிலும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாகச் செய்ய வேண்டும் என்பதை பகவத் கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.
கிருஷ்ணர் அவதரித்த இந்த இனிய நாளில், குழந்தைகளை கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்தும், அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை வரிசையாக பதிய வைத்தும், பார்ப்பவரின் கண்களுக்கு அந்தக் குழந்தை கிருஷ்ணனே, கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து, கோலமிட்டு, பலகாரங்கள், பால், தயிர், வெண்ணெய், பழ வகைகளைப் படைத்து இறைவனை வழிபட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர்.
அனைத்து உயிர்களிடத்தும் நட்பும், கருணையும் உடையவனாய், நான் எனது என்ற பற்று நீங்கி, இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கொண்டு பொறுமையுடனும், மகிழ்ச்சியுடனும், இறைவனிடத்தில் மனதையும், மதியையும் அர்ப்பணித்து வாழ்ந்திட வேண்டுமென்ற கீத உபதேசத்தை மக்கள் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் என்பதைத் தெரிவித்து, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எங்களது ``ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி’’ திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.