தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி. ஆக பதவியேற்றார்.
ஸ்டெர்லைட் விவகாரம் உள்பட பல்வேறு விவாகரத்தில் கடுமையான விமர்சனங்களை இருவருமே முன்வைத்ததால் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்தது.
தேர்தல் நடந்து முடிந்து 3 மாதம் ஆகிவிட்ட நிலையில், தற்போது கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கான மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த தேர்தலில் திமுக எம்பி கனிமொழி பணபலத்தை இறக்கி வெற்றி பெற்றதாக தமிழிசை சௌந்திரராஜன் தேர்தல் முடிந்த போதே குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் தற்போது தேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாக தனது மனுவில் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். மேலும் திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்புமனுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், அதனைச் சுட்டிக்காட்டிய பின்னரும் கூட புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.