தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், பள்ளிக்கல்வி, தொழில், உணவு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.சி.சம்பத், காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அந்தந்த துறைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்மாதம் 28-ஆம் தேதி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது குறித்து ஆல்லோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெளிநாட்டு பயணத்தில் அவர் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இம்மாதம் 28-ஆம் தேதி வெளிநாடு புறப்படும் முதல்வர் அடுத்த மாதம் 8-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் எனவும், இதனிடையே டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர் ஹித்தேஷ் குமார் மக்வானா, அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் பர்கீஸ் ஆகியோரும் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்துவர் எனவும் கூறப்படுகிறது.
எனினும் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத் திட்டம் தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.