கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சீரமைப்பு பணியின்போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கஜா புயலால் கடுமையாக சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் துணை மின்நிலையங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் ஓயாது பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடந்து கடந்த 16 ஆம் தேதி நாகையை சேர்ந்த வயர்மேன் சண்முகம் என்பவர் சீரமைப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கடந்த 20 ஆம் தேதி புதுக்கோட்டையில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கலைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரை துச்சம் என நினைத்து, சீரமைப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கும் 27,941 மின்வாரிய ஊழியர்களின் பணியினை மனதார பாராட்டுகிறேன். அவர்களது பணி மெச்சத்தக்கது.
சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த சண்முகம், முருகேசன் ஆகியோர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கப்படும்” அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை - 24.11.2018 pic.twitter.com/yTQSQyugw3
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 24, 2018