அனைத்து திரைப்படங்களும் வெளியாகும் வகையில் பெரிய திரையரங்குகளை பிரித்து கூடுதல் திரையரங்குகளை அமைத்துக் கொள்ள விரைவில் அனுமதி வழங்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடன் பேசுகையில்., "தமிழகத்தில் தற்போது 200 படங்களுக்கு மேல் வெளியிடப்படாமல் திரையரங்குகளுக்காக காத்திருக்கின்றன. இந்த பிரச்சினைகளை தீர்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதாவது, அனைத்து திரைப்படங்களும் வெளியாகும் வகையில் பெரிய திரையரங்குகளை 3-ஆக பிரித்து கூடுதல் திரையரங்குகளை அமைத்துக் கொள்ள விரைவில் அனுமதி அளிக்கப்படும். இதனால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதிகமான படங்களை திரையிட முடியும்" என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும் விதமாக ஆன்லைன் டிக்கெட் விற்பனை கைக்கொடுக்கும் என அமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் டிக்கெட் விற்பனை முறை, தமிழ் சினிமா வரலாற்றில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமையும் வகையில் இது மைல்கல்லாக அமையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.