ஒரே நாளில் 3 குழந்தை பலி; டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனரா?

கோவை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில் பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Dec 15, 2019, 02:14 PM IST
  • கோவை அரசு மருத்துவமனையில் சுமார் 195 பேர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
  • டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர், கோவை மாவட்டத்தை 17 பேர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 45 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் 36 பேர் குழந்தைகள் என்ற தகவல் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 3 குழந்தை பலி; டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனரா? title=

கோவை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில் பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுத்தது. 

இதேப்போல் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன. தமிழக அரசின் அந்த அதிரடி நடவடிக்கையாலும், தொடர் செயல்பாடுகளாலும் நோய் பாதிப்புகளும் குறைந்தது.

ஆனால் தமிழகத்தில் நீடித்து வரும் பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவை உட்பட திருப்பூர் ஈரோடு நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டெங்கு காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் சுமார் 195 பேர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர், கோவை மாவட்டத்தை 17 பேர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 45 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 36 பேர் குழந்தைகள் என்ற தகவல் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பு உட்பட அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பல்வேறு சிகிச்சைகள் பெற்றுவந்த மூன்று குழந்தைகள் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தது பெற்றோர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் நாச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமாரின் மகள் அஷ்விகா, கடந்த 5-ஆம் தேதி காய்ச்சல் பாதிப்புடன் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு டெங்கு வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.

இதனை தொடர்ந்து அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த வசந்தனின் மகள் மோனிஷா, திருப்பூர் வளவாஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த சர்வேஷ், ஆகியோரும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த குழந்தைகள் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்தனரா எனவும் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த வாரம் மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஜெசிந்தா மேரி மற்றும் தரணி ஆகியோர் பலியாகிய நிலையில் மீண்டும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் பலியாகிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Trending News